×

ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மந்தகதியில் பாலம் கட்டுமான பணி: வாகன ஓட்டிகள் அவதி

ஆவடி: ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இதனால், குறுகிய பாதையில் கடும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.  ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. ஜெ.பி எஸ்டேட், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, வீரராகவபுரம், காடுவெட்டி, வெற்றிலை தோட்டம், சென்னீர்குப்பம் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தனியார் கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ளதால், இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், வீரராகபுரம் பகுதியில் பாலம் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் பாரிவாக்கம், கண்ணபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் நீர் இந்த பாலம் வழியாக சென்று,  திருவேற்காடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் விரிசல் ஏற்பட்டு வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் இந்த பாலத்தின் வழியாக அதிக தண்ணீர் சென்றது.

அப்போது, விரிசல் அதிகமாகி பாலம் உடைந்து விழுந்தது. இதனால் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல கி.மீ சுற்றியே ஆவடி, பூந்தமல்லிக்கு சென்று வந்தனர்.பின்னர், அந்த பகுதியில் ராட்சத சிமென்ட் குழாய்கள் கொண்டு தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தற்காலிக பாலம் குண்டும் குழியுமாக உள்ளதுடன், குறுகி உள்ளதால் தினசரி காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், புதிய பாலம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. இதற்காக ₹4.50 கோடி நிதியை கடந்த 2017ம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது. இதனை அடுத்து, பாலம் கட்டும் பணியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொகுதி எம்.ஏல்.ஏவும், அமைச்சருமான க.பாண்டியராஜன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். ஆனால், ஒன்றரை ஆண்டுக்கு மேலாகயும் இதுவரை பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.இந்த பணிகளை வரும் மழைக்காலத்திற்குள் முடிக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.



Tags : Avadi - Poonamalle ,motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...