×

திருவாரூர் மாவட்டத்தில் போர்வெல் மூலம் குறுவை சாகுபடி பணி மும்முரம்

திருவாரூர், ஜூன் 4: திருவாரூர் மாவட்டத்தில் போர்வெல்கள் மூலம் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் முப்போகம் விளைவிக்கப்பட்டு வந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து உரிய நீர் கிடைக்காததன் காரணமாக முப்போகம் என்பது 2 போகமாக மாறியது. அதன் பின்னரும் முற்றிலுமாக நீர் கிடைக்காததன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை சாகுபடி இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் ஒருபோக சம்பா சாகுபடியினை மட்டுமே செய்து வரும் நிலையில் போர்வெல்கள் உள்ள இடங்களில் அதன் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் மற்றும் கோட்டூர் ஒன்றியங்களில் போர்வெல்கள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 65 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

அதன்படி நடப்பாண்டில் இந்த பணிகள் தற்போது துவங்கப்பட்டு அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நடவு பணிகள் முடிக்கப்பட்டு அடி உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போர்வெல்களுக்கு உரிய மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவைகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதால் உடனடியாக கர்நாடகவிடமிருந்து நீரை கேட்டுப் பெற்று மேட்டூர் அணையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur ,district ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது