×

நெல் சாகுபடியில் சிங்சல்பேட்டின் பங்கு விவசாயிகளுக்கு ஆலோசனை

பட்டுக்கோட்டை, ஜூன் 4: பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்டங்களில் துத்தநாகம் முதன்மையாக உள்ளது. மேலும் பல்வேறு நுண்ணூட்ட சத்துகளில் துத்தநாகத்தின் பற்றாக்குறை மண்ணில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் தழைச்சத்து உரமான யூரியா தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால் மண்ணின் கார அமில நிலை உயர்ந்து கொண்டே வருகிறது. பயிர்களுக்கு மணிச்சத்து உரங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து தீவிர நெல் சாகுபடி செய்யப்படுவதால் மண்ணிலிருந்து பயிர்களால் எடுத்து கொள்ளப்படும் துத்தநாகச்சத்தின் அளவு அதிகரிக்கிறது. மேலும் மண்ணில் கார அமிலம் 6 முதல் 8 வரை உள்ள நிலைகளிலும், களம் நிலங்களிலும் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண்ணிலும் இச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை. இதன் முக்கிய செயல் பயிர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நெற்பயிரில் துத்தநாக பற்றாக்குறை மற்றும் அறிகுறி: நுண்ணூட்ட சத்துக்களை பொறுத்தவரை துத்தநாக சத்து பற்றாக்குறை மட்டுமே நெற்பயிரில் காணப்படுகிறது. நெற்பயிருக்கு தொடர்ந்து வயலில் நீர் தேக்கி வைப்பதால் துத்தநாகம், துத்தநாக கார்பனேட்டாக மாற்றடைந்து பயிருக்கு கிடைக்ககூடிய துத்தநாக சத்தின் அளவு குறைந்து நுண்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. நெற்பயிரில் துத்தநாக குறைபாடு நாற்று நட்டு 3ல் இருந்து 4 வாரத்துக்குள் ஏற்படும். இளம் இலைகளில் நடுநரம்பு அடிபுறத்திலிருந்து வெளுத்து மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகளாக காணப்படும். மேலும் இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்து விடும். பயிர்கள் சீராக வளராமல் திட்டுதிட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும். பயிர்கள் வளரும்போது இக்குறைபாட்டின் அறிகுறிகள் மறைந்தாலும் விளைச்சல் குறையும்.
 
நிவர்த்தி செய்வதற்கான வழிமுறை: பயிர் சாகுபடி திட்டத்தில் தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்யாமல் இடையில் பயறுவகை பயிர்கள், பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட வேண்டும். துத்தநாக சல்பேட் உரத்தை ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் நடவுக்கு முன்பே மேலாக இட வேண்டும். அடியுரம் இட முடியாத சூழ்நிலையில் நடவு நட்டு 10 நாட்களுக்கு பின்பு 2 கிலோ சிங்க்சல்பேட் உரத்தை 200 லிட்டர் நீரில் கரைத்து இலைவழி உரமாக அளிக்க வேண்டும். வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடித்து போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்வதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Singlespat ,
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு