×

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தும்உப்பரிகை- மேலமானோஜிப்பட்டி சாலை சீரமைக்கும் பணி துவங்கவில்லை கிராவல் மண்ணிலிருந்து புழுதி பறப்பதால் மக்கள் அவதி

தஞ்சை, ஜூன் 4: தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தும் உப்பரிகை- மேலமானோஜிப்பட்டி சாலை சீரமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லை. கிராவல் மண்ணலிருந்து புழுதி பறப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை ராமநாதபுரம் ஊராட்சியில் உப்பரிகை தெருவில் இருந்து மேலமானோஜிப்பட்டி வரை 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலைகள், பொதுமக்கள் செல்வதற்கே லாயக்கற்ற வகையில் கிடந்தது. இதையடுத்து சாலையை சீரமைக்ககோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அதன்படி சாலை அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து எடுத்து விட்டு அதில் ஜல்லி பரப்பப்பட்டு கிராவல் கொண்டு மூடப்பட்டது. இதற்கிடையில் தேர்தல் வந்ததால் அதை காரணம் காட்டி பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. தற்போது ஏற்கனவே பரப்பப்பட்டுள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போதுகிராவல் மண்ணிலிருந்து புழுதி பறந்து தெரு முழுவதும் பறப்பதால் முதியோர், பெண்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தேவா கூறும்போது, இச்சாலை 12 ஆண்டுகளாக போடப்படவில்லை. தற்போது பணிகள் துவங்கியும் முடிக்கப்படாமல் தெருவே கிராவல் புழுதியாக உள்ளது. சாலையில் ஒரு வாகனம் சென்றாலே புழுதி பறக்கிறது.எனவே உடனடியாக இச்சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்