×

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளி எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை, ஜூன் 4: கோவை அரசு மருத்துவமனையில் விபத்து காயம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராமளான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், சாலை விபத்து, மாரடைப்பு, தீ காயம் உள்ளிட்ட பாதிப்புகளின் காரணமாக தினமும் ஏராளமானவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றனர். இது போன்ற நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ேகாவை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர பராமரிப்பு சிகிச்சை பிரிவு இருக்கிறது. மேலும், உயிருக்கு போராடும் நிலையில் நோயாளி இருந்தால் அவரின் நோய் தன்மை தொடர்பாக ட்ரமா (விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு) வார்டில் உள்ள மருத்துவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

பொதுவாக வார இறுதி நாட்களான, சனி, ஞாயிறு கிழமைகளில் அதிகளவிலான நோயாளிகள் சாலை விபத்து காரணமாக சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களில் கோவை நகர், புறநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் விபத்தினால் காயமடைந்தவர்கள் மற்றும் அவசர சிகிச்சை காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 4 மாதத்தில் மொத்தம் 4,460 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2,389 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.


Tags : Coimbatore Government Hospital ,
× RELATED காவல் நிலையத்தில் உயிரிழந்த உடலை கோவை...