×

பெருமாநல்லூர் அருகே சீரான குடிநீர் வினியோகிக்க கோரி காலிகுடங்களுடன் சாலைமறியல்

அவிநாசி, ஜூன் 4:சீராக குடிநீர் வினியோகிக்க கோரி, பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாநல்லூர் ஊராட்சியில்  5, 6, 7வது வார்டு கொண்டத்தம்மன் நகர், அறிவொளிநகர், கன்னிமார்தோட்டம், மாகாளியம்மன் கோயில் தெற்குதெரு, சென்னியப்பாநகர், பாரதியார் நகர், ஈசுவரன்கோவில் வீதி ஆகிய பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இவர்களது வீட்டு குடிநீர் இணைப்புகளில் கடந்த 12 நாட்களாக சீராக குடிநீர் வரவில்லை. இது தொடர்பாக கலெக்டரிடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர்வெல் வற்றிவிட்டது. தரைமட்ட தொட்டியிலிருந்து மேல்நிலைத்தொட்டிக்கு தண்ணீரை கொண்டு செல்ல, மின்மோட்டார் அங்கு இல்லை. குடிக்க தண்ணீர் கிடைக்காததால், கிராம மக்கள் லாரி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

 இதனால் நேற்று இளைஞர் பெருமன்ற முன்னாள் மாநிலகுழு உறுப்பினர் மகேந்திரன் (இ.கம்யூ) தலைமையில், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பெண்கள் காலிக்குடங்களுடன் ஆவேசமாக திரண்டு வந்தனர்.  திருப்பூர் ரோட்டில் ஊராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் இ.கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி செயலர் ராஜேந்திரன், கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் ஈசுவரன், இளைஞர் பெருமன்ற ஊராட்சி செயலாளர் சேகர், செல்வகுமார், ரமேஷ், நல்லமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்ததும், பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் செந்திகுமார், ஊராட்சி செயலர் மகேஷ் ஆகியோர் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு நடத்தினார். இதில்  2 நாட்களில் வீட்டு இணைப்புகளுக்கு சுழற்சி முறையில் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரி மூலம் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் பங்கேற்ற அனைவரும் கலைந்து சென்றனர்.



Tags : Perumannallur ,
× RELATED பெருமாநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்