×

தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

கோவை, ஜூன்4: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதில் தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கும் நிறுவனங்களால் மாசு  ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, விவசாயிகள் தேங்காய் தொட்டிகளை மாலையாக  கோர்த்து வந்து கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுக்கரை வட்டம்  செட்டிபாளையம் பேரூராட்சி அருகே உள்ள ஓராட்டுகுப்பை என்னும் கிராமத்தில் தேங்காய்  தொட்டிகளை எரித்து கரியாக்கும் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்கள் நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் தொட்டிகளை அதில் எரித்து கரியாக்கி விற்பனை  செய்கின்றனர். இதனால் அதற்காக உபயோகப்படுத்திய கழிவு நீர் பூமிக்கு கீழே சென்று நிலத்தடி நீர் மாசுபடுகிறது. மேலும் இந்த  நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு  ஏற்படுகிறது.  இந்த நிறுவனங்களை ஆய்வு செய்து அதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 கோவையில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனின் இழப்பிற்கு இழப்பீட்டு தொகையை பெற்று தரகோரி கணவரை இழந்த மனைவி கண்ணீர் மல்க கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் மனு அளித்தார்.  திருச்சி அருகே மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி, இத்தம்பதியினருக்கு ரகுபதி , ரேவதி, மற்றும் தமிழ்செல்வி என மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள், வடவள்ளி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த வருடம் ஒண்டிப்புதூர் அருகே உள்ள கட்டுமானப் பணி வேலைக்கு பெரியசாமி வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி, கடப்பாரையால் மண்ணைத் தோண்டிய போது, நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டு இருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், பலத்த காயத்துடன் மயக்கமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, பெரியசாமியின் குடும்பத்திற்கு வீட்டின் உரிமையாளர் மாணிக்கவாசகம் இழப்பீட்டுத் தொகையாக 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை பெற்றுத் தரும்படி லட்சுமி நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார்.

Tags : factories ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...