×

தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யாததால் காலிங்கராயன் வாய்க்காலில் பராமரிப்பு பணியில் சிக்கல்

ஈரோடு, ஜூன் 4:  பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக கொடுமுடி ஆவுடையார்பாறை வரை பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கால்வாய் மூலமாக 15 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது.  காலிங்கராயன் வாய்க்காலில் சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் அணைக்கட்டில் இருந்து வைராபாளையம் வரை கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளிலும் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வாய்க்கால் பராமரிப்பு பணிகளுக்காக மே மாதம் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் ஜூன் 15ம்தேதி முதல் வழக்கமாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பார்கள்.  வாய்க்காலில் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் சாக்கடைநீர் வாய்க்காலில் கலந்து வருகிறது. ஆகாய தாமரைகள் அகற்றப்படவில்லை. மேலும் பல இடங்களில் வாய்க்கால் உடைப்பும் உள்ளது. இந்த ஆண்டு வாய்க்கால் பராமரிப்பு பணிகளுக்காக போதிய நிதியை இதுவரை ஒதுக்காததால் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  மேலும் பவானிசாகர் அணையில் தற்போது நீர்மட்டம் 53.88 அடியாகவும், நீர்வரத்து 293 கனஅடியாகவும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தள்ளிபோகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பராமரிப்பு பணிகளுக்காக மே மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தல் நடந்ததால் பராமரிப்பிற்காக நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இம்மாதம் பராமரிப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். நிதி ஒதுக்கிய பிறகு 20ம்தேதி முதல் பராமரிப்பு பணிகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். வாய்க்கால் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு அணையில் உள்ள நீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறப்பு தேதி அறிவிக்கப்படும். இந்த ஆண்டு காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags : canal ,provinces ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்