×

சேலம், இளம்பிள்ளை, கெங்கவல்லியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி மறியல்

சேலம், ஜூன் 4: இளம்பிள்ளை மற்றும் கெங்கவல்லி தாலுகாவில், சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியம், கருக்கல்வாடி ஊராட்சியில் 10, 11 வது வார்டுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள கோட்டைமேடு, கலர்காடு, நரசுகாடு பகுதிகளில் கடந்த 6 மாதமாக, காவிரி நீர் கே.ஆர் தோப்பூரில் இருந்து இப்பகுதியில் உள்ள 4 தண்ணீர் தொட்டிகளுக்கு வரவில்லை.

மெயின் குழாயில் சிலர் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பதாகவும், முறைகேடாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளதால், எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை, என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். மேலும் டேங்க் ஆப்ரேட்டர்கள் குடிநீர் விநியோகம் செய்வதில்லை அவர்களை மாற்ற வேண்டும் என்றும், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வற்றி உள்ளதால், இப்பகுதியில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கே.ஆர் தோப்பூர்- இளம்பிள்ளை செல்லும் கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, எஸ்ஐ கருப்பண்ணன் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து தாரமங்கலம் பிடிஒ ரவி சந்திரன், ஊராட்சி செயலாளர் மாதேஷ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவிரி நீர் வருவதற்கு குடிநீர் வடிகால் வாரிய துறையினர் மூலம் முறைகேடாக போடப்பட்டுள்ள இணைப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இப்பகுதியில் தண்ணீர் உள்ள இடங்களை கண்டறிந்து புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதாகவும், மேலும் உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் பி டி ஓ  உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கெங்கவல்லி:அதேபோல் கெங்கவல்லி தாலுகா வீரகனூர் அருகே, புளியங்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீர் மற்றும் போர் வெல் குடிநீரும் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை, இதனால் சீரான குடிநீர் வழங்கக்கோரியும், 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன், புளியங்குறிச்சி-வி.களத்தூர் சாலையில், நேற்று காலை 6 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததால் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைவாசல் ஒன்றியம் சார்பில், போடப்பட்டு பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறு மின் மோட்டாரும் இது வரை சரி செய்யப்படவில்லை. ஊராட்சி செயலாளர் நேரில் வந்து குடிநீர் விநியோகம் சரிசெய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
தகவலின் பேரில், வீரகனூர் எஸ்ஐ ராமசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 5மணி நேரம் இந்த மறியல் நடந்தது.சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள கோட்டமேடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில், மேட்டூர் காவிரி நீர் விநியோகித்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இதனால் அப்பகுதி மக்கள், குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோட்டமேடு பகுதியை சேர்ந்த 40 பெண்கள் உள்பட சுமார் 100 பேர், காலிகுடங்களுடன் கே.ஆர்.தோப்பூர் - இளம்பிள்ளை சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடனே தண்ணீர் வழங்கினால் தான், மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடந்த நிலையில், வருவாய்த்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின்னர், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Salem ,Kangavalli ,Pillaiyil ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...