லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் 3 துணைத்தலைவர் பதவிக்கு வரும் 16ம் தேதி தேர்தல்

நாமக்கல், ஜூன் 4:நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் 16ம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர், செயலாளர், பொருளாளர், 3 துணைத்தலைவர், 3 இணைச்செயலாளர் என 9 பதவிக்கு மொத்தம் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசிநாள். நேற்று மாலை வரை யாரும் வேட்பு மனுவை வாபஸ்பெறவில்லை. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல்குழுத்தலைவர் அனிதாவேலு வெளியிட்டார். 3 துணைத்தலைவர் பதவிக்கு தர்மபுரி மாது, மதுரை சாத்தையா, பரமத்திவேலு£ர் ராஜி (எ) ராமசாமி, கோவை முருகேசன் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள். இது குறித்து தேர்தல்குழுத்தலைவர் அனிதாவேலு கூறியதாவது:

3 துணைத்தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிடுவதால், அந்த பதவிக்கு மட்டும் தேர்தல் நடக்கிறது. மற்ற பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டும் போட்டியிடுவதால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் முறைப்படி அறிவிப்பு வரும் 16ம் தேதி தான் அறிவிக்கப்படும்.
சம்மேளனத்தின் கட்டுப்பாட்டில் 88 கிளை சங்கங்கள் இருக்கிறது. இதில் நிர்வாகிகளாக உள்ள 439 பேர் தேர்தலில் வாக்களிக்கிறார்கள். வரும் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 3 துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல், வள்ளிபுரத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்குசீட்டு அச்சடிக்கப்படுகிறது.

தேர்தலில் வாக்குபதிவு முடிந்த உடன் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அனிதாவேலு தெரிவித்தார்.சம்மேளன தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் குமாரசாமி, செயலாளர் பதவிக்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, பொருளாளர் பதவிக்கு தற்போதைய செயலாளர் சேலம் தன்ராஜ் ஆகிய 3 பேரும், 3 இணைச்செயலாளர் பதவிக்கு பெரியகுளம் நிஜாத் ரஹ்மான், பவானி குமாரபாளையம் செல்வராஜா, திருச்சி சுப்பு ஆகியோர் மட்டும் போட்டியிடுவதால், இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : election ,Vice-President ,Larry Owners Federation ,
× RELATED துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு...