மாநில தலைவர் சஸ்பெண்ட் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 4: ஓய்வுபெறும் நாளில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், அருப்புக்கோட்டை பிடிஓ  அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 31ம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடராஜன் விளக்கவுரையாற்றினார். இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரதாப், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
 
அவர்கள் பேசுகையில், ‘32 வருடம் நேர்மையாக பணியாற்றிய மாநில தலைவர் சுப்பிரமணியன், தமிழகத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை ஒருங்கிணைத்து தலைமை வகித்தார். இதனால், அவரை பழிவாங்கும் நோக்கில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசும், விருதுநகர் கலெக்டரும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,’ என்றனர். ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.

× RELATED கரூரில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி...