×

ஏழு சமுதாய மக்கள் கோரிக்கை அருப்புக்கோட்டையில் துப்புரவு தொழிலாளர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதி மிகமோசம்

அருப்புக்கோட்டை, ஜூன் 4: அருப்புக்கோட்டையில் நகராட்சி காலனியில், துப்புரவு தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் அடிப்படை வசதி மிக மோசமாக உள்ளது. குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளின்றி அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை சுக்கிலநத்தம் ரோட்டில் உள்ள நகராட்சி காலனியில், துப்புரவு தொழிலாளர் வசிக்கின்றனர்.

நகரில் சுகாதாரக்கேடு, கழிவுநீர் தேக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு ஓடிச் சென்று சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களின் குடியிருப்பில் போதிய அடிப்படை வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த காலனியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒவ்வொரு குடியிருப்பிலும் 6 வீடுகள் வீதம் மொத்தம் 24 வீடுகள் உள்ளன. மேலும், பல தொழிலாளர்கள் சேதமடைந்த ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர். மேலும், இவர்களுக்காக கட்டப்பட்ட 5 வீடுகளில், பல ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்காமல், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம்:
இந்நிலையில், துப்புரவு தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் தரைத்தளம் பெயர்ந்துள்ளது. இதில், குழந்தைகள் நடக்கும்போது, அவர்களது கால்களை பதம் பார்க்கிறது. சேதமடைந்த தரைத்தள இடுக்குகளில் விஷப்பூச்சிகள் வாழ்கின்றன. தரைத்தளம் பெயர்ந்து இருப்பதால், மேடும் பள்ளமாக உள்ளது. இதனால், உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் உள்ள கழிவறை குழாய்கள் சேதமடைந்துள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பை 10 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தது.

அதன்பின்னர் எந்தவித மராமத்து பணியும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இங்குள்ள சுகாதார வளாகத்தின் கதவுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறைகளை பூட்டி வைத்துள்ளனர். இதனால், குடியிருப்புவாசிகள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். வீடுகளில், நகராட்சி குடிநீர் இணைப்பும் இல்லை. பொதுக்குழாய் ஒன்று மட்டும் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் குடியிருப்புவாசிகளுக்கு போதுமானதாக இல்லை. குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். மற்ற பயன்பாட்டுக்கும் தண்ணீரின்றி தவிக்கின்றனர். குடிநீருக்கு குடங்களுடன் நீண்ட தூரம் அலைவதாக பெண்கள் கூறுகின்றனர்.

போதிய தெருவிளக்கு இல்லாததால், தெருக்கள் இருளில் மூழ்குகின்றன. எனவே, துப்புரவு தொழிலாளர்களின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவும், தெருவிளக்கு, கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தரவேண்டும். மின் இணைப்பு பெறாமல் இருக்கும் 5 வீடுகளுக்கு மின்இணைப்பு பெற்று, அவைகளை துப்புரவு தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நகராட்சி பொறியியல் பிரிவில் கேட்டபோது: நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை மராமத்து பார்க்க, ரூ.ஒரு லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் மராமத்து பணி தொடங்கும்’ என்றனர்.

Tags :
× RELATED தேனியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை...