×

மானாமதுரையில் பயணிகளை பாதி வழியில் இறக்கும் பஸ்கள் ஊருக்கு நடந்து செல்லும் அவலம்

மானாமதுரை, ஜூன் 4:  மானாமதுரை நகருக்கு வெளியே தல்லாகுளம் பைபாஸ்ரோட்டில் பயணிகளை அரசு பஸ் ஊழியர்கள் இறக்கி விட்டு செல்வதால் முதியவர்கள், பெண்கள் நகருக்கு நடந்தே செல்லவேண்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வளர்ந்து வரும் நகர பகுதியாகும். ராமேஸ்வரம், மதுரை மார்க்கமாக தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் மானாமதுரை வழியாக செல்கின்றன. மதுரையிலிருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம், ஏர்வாடி, கீழக்கரை, கமுதி, சாயல்குடி உள்ளிட்ட 12 முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்களும் மானாமதுரை பகுதிக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் நான்குவழிச்சாலை பணிகள் முடிந்து மானாமதுரை பைபாஸ்ரோட்டில் ஆனந்தபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து ராமநாதபுரம் மார்க்கமாக வரும்போது மட்டும், அரசு பஸ்கள் பஸ்ஸ்டாண்டுக்குள் வருகின்றன. மதுரையில் இருந்து வரும்போது மட்டும் பைபாஸ்ரோட்டில் உள்ள சர்வீஸ்ரோட்டில் வராமல் தல்லாகுளத்தில் உள்ள பைபாஸ் சாலையிலேயே பயணிகளை இறக்கி விடுகின்றன.

குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் இப்படி செய்கின்றனர். இதனால் நள்ளிரவில் ஊர் திரும்பும் முதியோர், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் 15க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூரில் இருந்து வரும் பெண்கள் நகை அணிந்து வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப தல்லாகுளம் புறவழிச்சாலையில் ஆட்டோ வசதியும் கிடையாது.

இதனால் நள்ளிரவு நேரங்களில் நடந்து மண்டபங்களுக்கு செல்லும்போது பெண்கள், முதியோர்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. தனியார் பஸ்கள் ஒன்றிரண்டு வந்து கொண்டிருந்தன. அவையும் நேர பிரச்னை என பஸ்ஸ்டாண்டு, நகரின் உள்ளே நுழையாமல் புறவழிச் சாலையிலேயே பயணிகளை இறக்கி தவிக்கவிடுகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர் ஆதிமூலம் கூறுகையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் தல்லாகுளம் பகுதியில் பயணிகளை இரவில் இறக்கிவிட்டு செல்கின்றன. இரவில் பெண்கள் நடந்து வருவதற்கு பாதுகாப்பு இல்லை. பகலில் கொளுத்தும் வெயிலில் முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் துயரத்தை அனுபவிக்கின்றனர். எனவே வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மானாமதுரை நகருக்குள் வராத பஸ்ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : passengers ,Manamadurai ,town ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...