×

மாநில தலைவர் சஸ்பெண்ட் அரசு ஊழியர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 4: சங்கத்தின் மாநில தலைவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன். இவர் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றினார். ஜாக்டோ ஜியோ சார்பில் அரசுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினார்.

கடந்த மே 31ம் பணி ஓய்வு பெறும் நாளில் இவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.  இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். ஓய்வு பெறும் நாளில் இவர் மீது தமிழக அரசு பழிவாங்கும் நோக்கில் அரசின் அதிகார வர்க்கத்தால், நீதிக்கு எதிரான நெறியற்ற முறையை பின்பற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  அவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலக முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை கலெக்டர் அலுவலத்தில் நடந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா தலைமை வகித்தார். தலைவர் ஜெயராஜராஜேஸ்வரன், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஒச்சுக்காளை, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை, ஜாக்டோஜியோவினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

Tags : State President ,Government ,Madurai ,
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!