×

மதுரையில் ஒரு ஆண்டில் 3568 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை, ஜூன் 4: மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 3 ஆயிரத்து 568 கிலோ கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 712 பேரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூர், சேடபட்டி, கள்ளந்திரி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சில்லரை விற்பனை அதிகரித்து வருகிறது.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை  மொத்தம் மொத்தமாக வாங்கி கார், ரயில் மூலம் கடத்தி வந்து மதுரை,  திண்டுக்கல், தேனி வழியாக கேரளாவிற்கும், ராமநாதபுரம் கடல் வழியாக  இலங்கைக்கும் கொண்டு சேர்க்கின்றனர். மதுரை மாவட்டத்தில் அன்றாடம் 5 முதல் 10 கிலோ வரை கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது கிராமங்களில் விற்பனை தொடங்கி நடமாடும் கார்கள் மூலம் விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலைக்குண்டைச் சேர்ந்த அரசு அதிகாரியே தனது காரில் கடத்தி வந்த 251 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு பொலீசார் பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் மாநிலத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. போலீசாரும் கடத்தல் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

மதுரை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வரும் கும்பலை தொடர்ந்து கண்காணித்து கைது செய்து வருகிறோம். இதில் 4பிரிவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தமாக நகர், புறநகரில் 712 பேரை கைது செய்து, 3ஆயிரத்து568 கிலோ கஞ்சா, 17 கார்கள், 26 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளோம். நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் ஒருவர் ஒதுக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்’’ என்றார். 

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...