×

சாணார்பட்டி கூட்டுறவு வங்கிகளில் மோசடி குட்டு வெளியாகியும் முறையான நடவடிக்கை இல்லை கண்டும், காணாத மாவட்ட நிர்வாகம்

கோபால்பட்டி, ஜூன் 4: சாணார்பட்டி கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடந்தது தெரிந்தும் இதுவரை எந்த அதிகாரி மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என பொதுமக்கள், விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளில் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா நகை கடன், பயிர் கடன், மாடு கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆனால் பல கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

செங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பட்டா மாறுதல் செய்து பல கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொசவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஈமு கோலி கடன் வழங்கியதில் பல லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதேபோல் குரும்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் பல லட்சம் மோசடி நடந்துள்ளது. கடந்த வாரம் சாணார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி கூட்டுறவு வங்கிகளில் தொடர்ந்து மக்கள், விவசாயிகளின் பணத்தை மோசடி செய்து வெளிவந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் மாவட்ட நிர்வாகம் பல கோடி ஊழலை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் சாணார்பட்டி மக்கள், விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி அழகர்சாமி கூறுகையில், ‘சாணார்பட்டி ஒன்றிய கூட்டுறவு வங்கிகளில் பல லட்சம் மோசடி நடந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வங்கிகளில் அதிகாரிகளே கொள்ளை அடிக்க துவங்கி விட்டனர். இதனால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளை விட்டு விட்டு அதிக வட்டி வாங்கும் தனியார் வங்கிகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார்.

Tags : banks ,Chaararpatti ,administration ,District ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...