×

பற்றாக்குறை எதிரொலி பழநியில் மின்மோட்டாரில் குடிநீர் உறிஞ்சுவது அதிகரிப்பு ஆய்வுக்கு வருமா நகராட்சி

பழநி, ஜூன் 4: குடிநீர் பற்றாக்குறையின் காரணமாக பழநியில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நகராட்சி ஆய்வுக்கு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்தும் குடிநீர் பெறப்படுகிறது. போதிய மழை இல்லாததால் பாலாறு அணையில் போதிய நீர் இல்லை. இதனால் பழநி நகரின் பல பகுதிகளுக்கு தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் பழநி நகரில் உள்ள பல்வேறு போர்வெல்களிலும் தண்ணீர் இல்லை.

இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யும்போது பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீரை இழுத்து விடுகின்றனர். இதனால் பல வீடுகளில் பைப்களில் விநியோகிக்கப்படும் தண்ணீர் போதிய அளவு வருவதில்லை. கடந்த ஆண்டு நகராட்சி சார்பில் வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீரை உறிஞ்சிய மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

ஆனால், இந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏதும் ஈடுபடவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது பறிமுதல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடிய கொத்தனார் கைது