பீர்பாட்டிலால் அண்ணன், தம்பியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரி, ஜூன் 4:   முருங்கப்பாக்கம் அருகே பீர்பாட்டிலால் அண்ணன், தம்பியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை முதலியார்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை, நைனார்மண்டபம், சுதானா நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (61), ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு கார்த்திகேயன் (30), திருமுருகன் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர். பி.டெக் முடித்த கார்த்திகேயனுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் வேலை தேடி வருகிறார். அவரது தம்பி திருமுருகன் பி.டெக் 3ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் அண்ணன், தம்பி இருவரும் முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த முருங்கப்பாக்கம் ராஜ், மற்றொரு வாலிபர் பீர் பாட்டிலை எடுத்து வீசிய நிலையில், கார்த்திகேயன் தலையில் விழுந்ததில் காயமடைந்தார். இதை திருமுருகன் தட்டிக்கேட்ட நிலையில் அக்கும்பல் அவரை பாட்டிலால் தலையில் தாக்கியதோடு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டது.பின்னர் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  இதுபற்றி கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை எஸ்ஐ வீரபத்திரசாமி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து, ராஜ் உள்ளிட்ட 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : Prabharthil ,
× RELATED கலைஞரின் மைத்துனர் ராஜரத்தினம் மரணம்