×

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூல் மாவட்ட கல்வி அலுவலகத்தை பெற்றோர்கள் திடீர் முற்றுகை

கள்ளக்குறிச்சி, ஜூன் 4:  கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பிற்கு ஆங்கில வழி கல்வி பாடம் நடத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மாணவிகள் தனியார் பள்ளியில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆங்கில வழி கல்வி பயில மாணவிகள் மிகுந்த நாட்டத்துடன் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிளஸ்1 சேர்க்கைக்கு மாணவிகளுடன் பெற்றோர்கள் ஏராளமானோர் அரசு பள்ளிக்கு வருகை தந்தனர். அங்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தபோது ஒவ்வொரு மாணவிக்கும் பள்ளி நிர்வாகம் தலா ரூ.1500 கட்டாய வசூல் செய்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் மார்க்கிரேட்டிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது அவர், ஆங்கிலவழி பாடம் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லை. 6 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.40 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம்  வழங்க வேண்டும். இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் போதிய நிதி இல்லை. அதனால்தான் கடந்த ஆண்டு கட்டணம் வசூல் செய்தது போல் இந்த கல்வி ஆண்டிலும் ஒவ்வொரு மாணவிகளிடமும் ரூ.1500 கட்டணம் வசூல் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு நாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டு தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு தலைமை ஆசிரியர் மார்க்கிரேட், நான் தனிபட்ட முறையில் இந்த முடிவை எடுக்கவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பெண்கள் பள்ளி பாலகிருஷ்ணன், ஆண்கள் பள்ளி பாபு ஆகியோர் உத்தரவுபடிதான் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1500 கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறினார். இதையடுத்து பெற்றோர்,  கட்டணம் வசூல் செய்வதாக இருந்தால் ஒரு வகுப்பறையில் 45 மாணவிகளுக்கு மட்டுமே பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை ஏற்கமறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சுமார் 50 பேர் மாணவிகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு திரண்டு சென்று முற்றுகையிட்டனர். இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகாவை சந்தித்து முறையிட முயன்றனர். ஆனால் அவர் அலுவலக பணி காரணமாக வெளியூர் சென்றிருந்ததால், அங்கிருந்த அலுவலர்களிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவிகளுக்கும் பிளஸ்1 சேர்க்கைக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா அதிரடியாக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கட்டணம் ஏதும் வசூல் செய்யாமல் பிளஸ்1 சேர்க்கை பணி நடந்தது. மாணவிகள் சேர்க்கைக்கு கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து பெற்றோர்கள் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : blockade ,parents ,District Education Office ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்