×

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

கடலூர், ஜூன் 4: கோடை விடுமுறைக்கு பின்னர் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. புதிய மாணவர்களுக்கு வரவேற்பு பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோடைகால விடுமுறை பள்ளிகளுக்கு இந்த ஆண்டு முன் கூட்டியே விடப்பட்டது. சுமார் 50 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்தது. கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி நேற்று பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்  பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.

புதிய வகுப்பிற்கு வருகை தந்த மாணவர்கள் உற்சாகத்துடன் முதல் நாள் ஆண்டு பள்ளி துவக்கத்தை துவக்கினர். இந்நிலையில் நீண்ட விடுமுறைக்கு பின்னர் கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நகரபகுதியிலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முக்கிய சாலைகளில் பெற்றோர்களுடன் மாணவர்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூர் பாரதி சாலை, லாரன்ஸ் சாலை, திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். முதல் நாள் பள்ளி துவக்கம் என்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அதனை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுவர் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கு வருகை தந்த புதிய மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது போன்று அரசு பள்ளிகளில் புதிய பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு பாடநூல்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது வருகைபதிவை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்தனர்.

Tags : Opening ,schools ,Cuddalore district ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...