×

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் பைக்கில் அதிவேகத்துடன் செல்லும் இளைஞர்களால் தொடர் விபத்து

நெய்வேலி, ஜூன் 4: நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் அதிக வேகத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 1 முதல் 30 வரை உள்ளது. இங்கு என்.எல்.சி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், வங்கி ஊழியர்கள், காவல்துறையினர், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் வசித்து வருகின்றனர். குறிப்பாக நெய்வேலி மெயின் பஜார் பகுதியில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து நடைபெறும் சாலை ஆகும். இங்கு மாலை நேரங்களில் என்.எல்.சி செக்யூரிட்டி ஊழியர்கள், காவல் துறையினர்  போக்குவரத்தை சீர் செய்வதும், வாகன தணிக்கையில் ஈடுபடுவதும் வழக்கம். ஆனால் அதையும் மீறி சில இளைஞர்கள் அதிக என்ஜின் திறன் கொண்ட ரேஸ் பைக்குகளை வைத்துக்கொண்டு மாலை நேரங்களில் மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வட்டமடித்து சாலையில் அதிக சத்தத்துடன் ஆரன் அடித்தவாறு வேகமாக செல்வதால் சாலையில் போகும் மக்கள் அச்சப்படுகின்றனர்.

இதுபோன்ற செயலால் முன்னால் செல்லும் வாகனங்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்து வருகின்றனர். இதனால் சில நேரங்களில் வாகன விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சமூகஆர்வலர் ராஜ்குமார் கூறுகையில், இங்கு பணிபுரியும் என்.எல்.சி ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு படிக்கின்ற வயதிலேயே அவர்கள் கேட்கும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை வாங்கித் தருகின்றனர். இதுபோன்ற பைக்குகளில் அதிக வேகத்துடன் சென்றால் ஆபத்து ஏற்படும் என்பதை கூட உணராமல் அவர்கள் நண்பர்களுடன் அதிக வேகத்தில் சென்று விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் சாலையில் செல்லும் அப்பாவி மக்கள் மீதும் மோதி விபத்து ஏற்படுத்துகின்றனர். வாகன தணிக்கையில் காவல்துறையினர் மாணவர்களை பிடித்தால் அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அல்லது அபராத தொகையை செலுத்திவிட்டு மீண்டும் அவர்கள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிக வேகத்துடன் இரு சக்கர வாகனத்தில் வரும் இளைஞர்களை கண்காணித்து அவர்கள் மீது நெய்வேலி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : accidents ,men ,Neyveli Township ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...