×

திட்டக்குடி பகுதியில் உப்பு கலந்த தண்ணீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு

திட்டக்குடி, ஜூன் 4: திட்டக்குடி பகுதியில் குறிப்பாக சிறுமுளை, செவ்வேரி, நெடுங்குளம், புதுகுளம் உட்பட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வரும் குடிநீரில் அதிகளவு சுண்ணாம்பு, உப்பு கலந்துள்ளதால் இந்த குடிநீரை குடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு திருச்சி மற்றும்  பெரம்பலூர் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். குடிநீரின் தரம் குறைந்துள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் வெளியூரில் இருந்து கேன் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால் இப்பகுதியில் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகமாக வசிக்கின்றனர். சிலர் பொருளாதார நிலை காரணமாக அவரவர் ஊர்களில் கிடைக்கும் குடிநீரை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனிமவளத்துறையினர் இப்பகுதி கிராமங்களில் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையினை அரசுக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் இப்பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த குடிநீர் காலை அரைமணி நேரமும், மாலை அரைமணி நேரம்தான் வருகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் அரசு உரிய கண்காணிப்பு மேற்கொண்டு இப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும், பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : public ,plot area ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...