×

ஸ்மார்ட் டிவியில் ரைம்ஸ், பாடம், பூங்கா அமைப்பு மாவட்ட மாதிரி அரசுப்பள்ளி எல்கேஜியில் 51 பேர் சேர்ந்தனர்

நெல்லை, மே 4:  நெல்லை மாவட்ட மாதிரி அரசுப்பள்ளியில் 51 மாணவ, மாணவிகள் எல்கேஜி வகுப்பில் சேர்ந்தனர். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசுப்பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் அம்பை ஏவிஆர்எம்வி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளியாக கடந்த கல்வியாண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்காக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் சேர்க்கை நடந்தது. எல்கேஜி என்பதால் இப்பள்ளியில் எல்கேஜிக்கு முதல் முறையாக மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பள்ளி தலைமையாசிரியர் மேரி மார்கரெட் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக 51 பேரை சேர்த்தனர். மேலும் எல்கேஜி மாணவர்களுக்காக சகல வசதிகளுடன் சிறப்பு வகுப்பு அமைக்கப்பட்டது. மேலும் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, ஸ்மார்ட் டிவி அமைத்து அதன் மூலம் ரெய்ம்ஸ், பாடம் உள்ளிட்டவை வீடியோ வடிவில் கற்றுக் கொடுப்பது, மாணவர்களுக்கு தனி இருக்கைகள் மற்றும் மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நர்சரி பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் அரசு அறிவித்த ஆசிரியர் ஒருவரும் இப்பள்ளியில் எல்கேஜிக்கு பாடம் எடுக்கிறார். காலையில் கற்பித்தல், பிற்பகல் ஓய்வு, பின்னர் விளையாட்டு போன்ற அட்டவணை தயாரித்து கற்றுக்கொடுக்கின்றனர். முதல் நாளான நேற்று துவக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இப்பள்ளியில் எல்கேஜி சேர்ந்துள்ள மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், தனியாருக்கு இணையாக இப்பள்ளியில் வசதிகள் ஏற்படுத்தி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதே வசதிகளை இந்த மாதிரி பள்ளியில் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஏற்படுத்தி கூடுதல் கவனம் செலுத்தினால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் தனியார் பள்ளிகளுக்கு செல்வது குறையும், என்றனர்.

Tags : Rams ,Gardens District Model School ,
× RELATED ஹீரோயினாக நடிக்கும்‘மிஸ் ஆசியா’