×

சின்னசங்கரன்கோவில் ஆற்றங்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

அம்பை, ஜூன் 4:  அம்பை சின்னசங்கரன்கோவில் அருகே தாமிரபரணி நதிக்கரையில் குவிந்து கிடந்த காலிபாட்டில்கள், பிளாஸ்டிக் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை அம்பை நகராட்சி நேற்று அகற்றியது. நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் நிலவும் வறட்சி காரணமாக   அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு நிலத்தடிநீர் குறைந்துள்ளது. அருவிகளிலும் நீராட வழியின்றி பொதுமக்கள் பாதுகாப்பான ஆற்றங்கரைகளில் இறங்கி நீராடி வீடுகளுக்கு செல்கின்றனர். மணிமுத்தாறு அருவியில் வறட்சி தென்படுவதால் அம்பை தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள சின்ன சங்கரன்கோவில், ரயில்வே பாலம், ஆஞ்சநேயர் கோயில், காசிநாதர் கோயில், ஆயிரங்கால் மண்டபம் போன்ற புஷ்கரணி தீர்த்த கட்டங்கள் நடந்த படித்துறைக்கு மக்கள் குளிப்பதற்கு வருகின்றனர். உணவுடன் காலையிலே குடும்பத்துடன் வாகனங்களில் வந்து ஆனந்த குளியலிட்டு அருகிலுள்ள மண்டபத்தில் ஓய்வெடுத்து காய்ந்த ஆடைகளுடன் மாலையில் திரும்பி செல்கின்றனர்.

அவர்கள் விட்டு செல்லும் பொருட்களால் ஆறு மாசுபடுவதோடு, ஆற்றின் கரையோரங்களும் அசுத்தமாக மாறி வந்தன. குளிக்க வரும் மக்கள் பயன்படுத்தி தூக்கி எறிந்த துணி, மீதியான உணவு, பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் போன்ற கழிவுகள் தாமிரபரணி நதிக்கரையோரம் ஆங்காங்கே குவிந்து கிடந்தது. அதனை சிலர் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையால் கொடிய நோய் தாக்கும் அபாயம் இருந்தது. குடிமகன்கள் காலி பாட்டில்களை தண்ணீரினுள்ளும் படித்துறைகளிலும் உடைத்தெறிந்து சென்றனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று அம்பை நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்ற களம் இறங்கினர். ஆங்காங்கே கிடந்த துணிமணிகள், மதுபாட்டில்கள், உணவு பண்டங்களுக்கான கவர்கள் ஆகியவற்றை லாரியில் அள்ளிச்சென்றனர். மேலும் குளிக்க வந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் விளக்கினர். அப்பகுதியில் தேவையான அளவு குப்பை தொட்டிகள் வைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Removal ,banks ,Chinnasankaranko River ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...