நாகையில் திருமண உதவி திட்டத்திற்கு இருப்பிட சான்று கேட்டு வரும் பயனாளிகள் அலைக்கழிப்பு

நாகை,ஜூன் 4: நாகையில் திருமண உதவி திட்டத்திற்கு இருப்பிடச் சான்று கேட்டு பயனாளிகளை அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழக அரசால் வரிப்பணத்தில் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு சமூகநலத்துறை சார்பில் மூவலு£ர்ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் வழங்கப்படுகிறது. அவ்வாறு திருமண நிதி வேண்டி விண்ணப்பிக்கும் ஏழை, எளிய மக்கள் அரசின் விதிமுறைகளின்படி சில ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இதன்படி வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், திருமண அழைப்பிதழ், மணமகள் கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் முதல் திருமண சான்று, மணமகள் மதிப்பெண் பட்டியல், ரேசன்கார்டு, மணமகன் கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் முதல் திருமண சான்று, மணமகள், மணமகன் மற்றும் பெற்றோர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம்,பெற்றோர் ஆதார் அட்டை. இந்த ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைந்து திருமணத்திற்கு முன்னர் 40 நாட்களிலிருந்து 1 நாள் முன்னர் வரை விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் திட்டம் 1 கீழ் ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் தரப்படும். திட்டம் 2ன் கீழ் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் தரப்படும். ஆனால் நாகை மாவட்டத்தில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் இருப்பிட சான்று இணைத்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறி பயனாளிகளை மன உளைச்சலுக்கு உட்படுத்துவதாக சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழக அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக நாகை மாவட்ட சமூக அலுவலகத்தில் திருமண நிதி உதவி பெறுவதற்கு இருப்பிட சான்று, மணமகன் ரேஷன்கார்டு வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தமிழக அரசின் அதிகாரிகள் தான். ஏதோ வேறு நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் போல் செயல்படுகின்றனர். தமிழக அரசின் ஆணையில் திருமண நிதி உதவி பெற இந்த, இந்த ஆவணங்கள் தேவை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைக்கவில்லை என்றால் மனுக்களை நிராகரிக்கலாம். சில தேவையில்லாத ஆவணங்களை கேட்டு பயனாளிகளுக்கு பயன் கிடைக்க செய்யவிடாமல் அலைக்கழிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More
>