வேலூர் அடுத்த பாலமதி மலை முருகன் கோயிலில் 31 அடி கல்லால் ஆன முருகன் சிலை பிரதிஷ்டை விரைவில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் திட்டம்

வேலூர், ஜூன் 4: வேலூர் அடுத்த பாலமதி மலை முருகன் கோயிலில் பக்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட 31 அடி கல்லால் ஆன முருகன் சிலைக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.வேலூர் அடுத்த பாலமதி மலையில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரால் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. தொடர்ந்து தென்தமிழகத்தில் இருந்து இங்கு வந்த ராமகிருஷ்ணசாது என்ற சாமியார் மற்றும் பக்தர்களின் பெரு முயற்சியால் பாலமதியில் பெரிய அளவில் முருகன் கோயில் கட்டப்பட்டு, ஆடிக்கிருத்திகை, தை கிருத்திகை, வைகாசி விசாக பெருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.மேலும் இக்கோயிலுக்கு வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிக்கிருத்திகை அன்று காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சமீபத்தில் இக்கோயில் கட்டுவதற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்ட ராமகிருஷ்ணசாது இறந்தார். அவரது சமாதி கோயில் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் பத்துமலை முருகன் கோயிலை போன்று மலையடிவாரத்தில் முருகனின் பிரமாண்ட சிலை வைக்க பாலமதி முருகன் பக்தர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி ஏறத்தாழ ₹80 லட்சம் செலவில் வடதமிழகத்திலேயே பெரிய அளவில் பீடத்துடன் 31 அடி உயரம் கொண்ட கல்லால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். ஒரு கரம் இடுப்பில் வைத்தபடியும், மறுகரம் வேலை பிடித்தபடி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது.இதுதொடர்பாக பக்தர்கள் கூறும்போது, ‘வடதமிழகத்தில் இதுதான் கல்லால் ஆன பெரிய முருகன் சிலையாக இருக்கும் என்று கருதுகிறோம். கோயிலில் மூலவர் சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டது. கோயில் வெளியில் படிக்கட்டுகளின் அருகில் நிறுவப்பட்டுள்ள முருகன் சிலை பீடத்துடன் 31 அடி உயரம் கொண்டது. விரைவில் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.


Tags : Murugan ,idol ,Shiva ,Murugan temple ,Palladers ,Vellore ,
× RELATED முருகன் சப்பர வீதியுலா