×

உறவினருடன் நிலத்தகராறில் குடிநீர் பிடிக்கக்கூடாது என்று மிரட்டல் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊர் பஞ்சாயத்து கலெக்டரிடம் பெண் கண்ணீர் புகார்

வேலூர், ஜூன் 4:உறவினருடன் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததுடன் கால்நடைகளை கொன்றுவிடுவதாக ஊர் பஞ்சாயத்தார் மிரட்டுகின்றனர் என்று கலெக்டரிடம் பெண் புகார் அளித்துள்ளார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் 122 பேர், வேலூர் மாவட்டத்தில் 79 பேர் என தினக்கூலி அடிப்படையில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். நாங்கள் மருத்துவமனை துப்புரவு பணி, வார்டு பணி, அலுவலர்களுக்கு உதவிப்பணி என 15 வகையான பணிகள் செய்து வருகிறோம். எங்களுக்கு 2018ம் ஆண்டு முதல் ₹311 தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் எங்களை போன்ற தினக்கூலியாக அரியலூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு ₹400க்கு மேல் வழங்கப்படுகிறது. எங்களுக்கும் அவர்களை போல தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்றனர்.வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அகஸ்தீஸ்வரர் கோயில் டிரஸ்ட் சார்பில் அளித்த மனுவில், ‘வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில், லோகநாயகி சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு மின்சார வசதி தரும்படி கோட்டை சுற்றுச்சாலை மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தோம்.

அவர்கள் தாசில்தாரின் தடையில்லா சான்று கேட்டனர். அதன்படி மார்ச் மாதம் சான்று வழங்கினோம். ஆனால் இதுவரை மின்இணைப்பு வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். உடனடியாக மின்இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றனர்.திருப்பத்தூர் அடுத்த கும்மிடிக்கான்பட்டி, அணிகானூர் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவர் கண்ணீருடன் அளித்த மனுவில், ‘எனது உறவினர்களுக்கும் எனக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. எனது நிலத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டனர். இந்த வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் உள்ளது. ஆனால் எனது உறவினர்கள் பேச்சைக்கேட்டு, ஊர் பஞ்சாயத்தார் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர்.மேலும், ஊருக்குள் குடிப்பதற்கு தண்ணீர் பிடிக்கக் கூடாது. ஊருக்குள் கால்நடைகளை மேய்க்கக்கூடாது. அவ்வாறு மேய்த்தால் கால்நடைகளை அடித்துக்கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர். வீட்டின் அருகே குப்பை வண்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அதை பிடிஓ எடுக்க போனால் அவரையும் தடுத்து விடுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


Tags : panchayat collector ,town ,relatives ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது