×

காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு பட்டை நாமம், கறுப்பு பேட்ஜ் அணிந்து நெசவாளர்கள் நூதன போராட்டம்

சென்னை, ஜூன் 4: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் பட்டை நாமமிட்டு, கறுப்பு பேட்ஜ் அணிந்து சங்க பொதுக்குழுவில் கலந்துகொண்டனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் 2017--18ம் ஆண்டின் வரவு, செலவு இனங்களில் பெரும் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இச்சங்கத்தின் ஊழல் புகார்கள் குறித்து கைத்தறித்துறை இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ் விசாரணை நடத்தினார்.இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் நடத்தவேண்டிய சங்க பொதுக்குழுக் கூட்டம் நடத்தாமல், தள்ளி வைக்கப்பட்டது.  இதனால் ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனஸ், இந்த ஆண்டு வழங்கவில்லை.இதைதொடர்ந்து, கடந்த மாதம் இச்சங்கத்தின் தணிக்கை அறிக்கை முடிக்கப்பட்ட நிலையில், அதில் பல்வேறு ஊழல் முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் குறித்து தகவல் வெளியானது. அதன் காரணமாக காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் மோகன்குமார், மேலாளர் முருகானந்தம், டிசைனர் கருணாநிதி ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

மேலும் தலைவர் வள்ளிநாயகம், துணை தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம் மற்றும் 5 நிர்வாக இயக்குநர்களுக்கு தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 5 மாதத்துக்கு பின் நேற்று நடந்தது.முன்னதாக, ₹5 கோடி நஷ்டம் அடைய காரணமான நிர்வாக குழுவினரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, சங்க நெசவாளர்கள் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள முத்தீஸ்வரர்கோயில் முன்பு நெற்றியில் பட்டை நாமமிட்டு, கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்று பொதுக்குழுவில் பங்கேற்றனர்.மேலும்,  சங்க ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட வரவு - செலவு இனங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் பொதுக்குழு கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

Tags : Kanchipuram Murugan Silk Co-operative Society ,
× RELATED முறைகேடு புகாரில் காஞ்சிபுரம்...