வீட்டுமனை வாங்கி கொடுப்பதில் தகராறு கோஷ்டி மோதலில் 4 பேருக்கு கத்திக்குத்து


செங்கல்பட்டு, ஜூன் 4: செங்கல்பட்டில் வீட்டுமனை வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பழைய காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (50). அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (55). இவரது மருமகன் பழனி (35). திருநாவுக்கரசுவின் அக்கா ரேவதி, குரோம்பேட்டையில் வசிக்கிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன் ரேவதி, திருநாவுக்கரசு மூலம் வீட்டுமனை வாங்குவதற்காக, ₹1.5 லட்சத்தை பழனியிடம் கொடுத்தார். ஆனால் பழனி, வீட்டுமனை வாங்கி தரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர், பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர், பணத்தையும் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரேவதி, தனது தம்பி திருநாவுக்கரசு, சிவகுமார் ஆகியோருடன், ஏழுமலை வீட்டுக்கு சென்றார். அங்கு நிலம் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கடும் வாக்குவாதம் நடந்தது.அப்போது இரு தரப்பினரும், ஒருவரையொருவர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொண்டனர். இதில் திருநாவுக்கரசுக்கு தலையில் பலத்த காயமும், சிவகுமாருக்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. ஏழுமலை மற்றும் அவரது உறவினர் பார்த்திபனுக்கும் வெட்டு விழுந்தது. அனைவரும் ரத்தவெள்ளத்தில் அலறி துடித்தனர்.தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த ஏழுமலையை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், மற்றவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையின் மகன்கள் ஸ்டீபன் (25), தனுஷ் (23), கோபி (30), கன்னியப்பன் (40) மற்றும் ஜோதி (22), விஜய் (25) ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : quarrel conflict ,purchase ,
× RELATED அரசு கட்டிடங்களுக்காக பாதுகாத்து...