×

கன்னியாகுமரி நரிக்குளத்தில் தண்ணீரை வீணடித்து மண் கடத்தல்

கன்னியாகுமரி, மே 30:  கன்னியாகுமரியில்  இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் மகாதானபுரம் அருகே நரிக்குளம்  உள்ளது. நான்குவழி சாலை இந்த நரிக்குளம் வழியாக செல்கிறது. இதற்காக ரூ.22  கோடி மதிப்பில் குளத்தின் குறுக்கே இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 500  மீட்டர் நீளம் கொண்ட பாலத்தில் 102 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட பாலம், 10  மீட்டர் நீளம் கொண்ட 2 சிறு பாலங்கள், 1,500 மீட்டர் நடைபாதை போன்றவை  அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடைக்காலம் என்பதால் நரிக்குளத்தில்  நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது பெய்த ஒருசில மழையால்  நீர் பெருகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நரிக்குளம்  மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றன. மேலும் கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பேரூராட்சிகளுக்கு  குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாகவும், இப்பகுதியில் நிலத்தடி  நீர்மட்டம் உயரவும் இந்த குளம் முக்கிய காரணமாக உள்ளது.

இந்த நிலையில்  நரிக்குளத்தை சீரமைத்து கரையை பலப்படுத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக குளத்தில் இருந்து மண் எடுத்து கரைகளை பலப்படுத்த வேண்டும். குளத்தில் இருந்து மண் எடுத்து வேறிடத்துக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை.  ஆனால் குளத்தில் இருந்து அதிக அளவில் மண் எடுத்து வாகனங்களில் கொண்டு சென்று  விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக பகலில் ஒரு பொக்லைன் இயந்திரமும், மாலை  6 மணி முதல் 3 பொக்லைன் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு மண் வெட்டி எடுத்து முழு  வீச்சில் கடத்தி வருகின்றனர். அதுபோல மண் எடுப்பதற்கு வசதியாக  குளத்து நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வீணடித்து வருகின்றனர். இதற்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் கடும் தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ேகாடை மழையும் கைகொடுக்கவில்லை. மழை எப்போது  பெய்யும் என தெரியவில்லை. எனவே இருக்கும் கொஞ்சம் நீரையும் சிக்கனமாக  பயன்படுத்தாமல் வீணடிப்பது கண்டனத்துக்கு உரியது என விவசாயிகள், பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர். உரிய அனுமதியின்றி இவ்வாறு மண் எடுப்பதால்  அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட  புதிய பாலத்தின் கீழ்ப்பகுதியிலும் ஆழமாக மண் தோண்டுகின்றனர். இதனால் மழை  பெய்து குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது பாலத்தின் தூண்கள் ேசதமடையும்  அபாயம் உள் ளது. எனவே அதிகாரிகள் சம்பவ இடத்தை உடனடியாக பார்வையிட்டு  விதிமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kanyakumari ,forest ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...