×

இடைப்பாடி பகுதியில் 200 ஏக்கரில் அறுவடைக்கு வந்த ரெட்லேடி ரக பப்பாளி

இடைப்பாடி, மே 30:  இடைப்பாடி பகுதியில் 200 ஏக்கரில் ரெட்டி லேடி வகை பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அறுவடை தொடங்கியுள்ளது.இடைப்பாடி பகுதியில் பரவலாக பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். இடைப்பாடி மற்றும் தண்ணீர்தாசனூர், ஒக்கிலிப்பட்டி, நெடுங்குளம், 4ரோடு, காட்டூர், பில்லுக்குறிச்சி, காசிக்காடு, ஓனாப்பாறை, கூடக்கல், குப்பனூர், பூமணியூர், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, அம்மாபாளையம், அண்ணமார் கோயில், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் ரெட்லேடி ரக பப்பாளியை பயிரிட்டுள்ளனர். சுமார் 3 அடி உயரமே வளரக்கூடிய இவ்வகை பப்பாளியில் அதிகளவில் காய் பிடித்து தற்போது அறுவடைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஓராண்டுக்கு முன்பு பாத்தி அமைத்து பப்பாளி சாகுபடி செய்தோம். களை எடுத்தல், உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளை செய்ததன் மூலம் அதிகளவில் காய்கள் பிடித்து, தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. தொழிலாளர்கள் மூலம் பழங்களை பறித்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம். கிலோ ₹10 முதல் ₹15 வரை விலை கொடுத்து வியாபாரிகள் நேரடியாகவும் வாங்கிச் செல்கிறார்கள். பப்பாளியில் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறது. 6 முதல் 7 ஆண்டுகள் வரை பயன் தருகிறது. நோய் தாக்குதல் அதிகம் இல்லாமலும், குறைந்த நீராதாரத்திலும் செழித்து வளரக்கூடியது என்பதாலும் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். பப்பாளி மரங்களுக்கிடையே ஊடுபயிராக பயறுவகை பயிர்களையும் சாகுபடி செய்கிறோம்,’ என்றனர்.


Tags : area ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!