×

திருச்செங்கோடு அருகே கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதி

திருச்செங்கோடு, மே 30: திருச்செங்கோடு  அருகே பிலிக்கல் மேடு பகுதியில் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் கரடி  நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.நாமக்கல்  மாவட்டம் திருச்செங்கோடு- கொக்கராயன்பேட்டை சாலையில்  பிலிக்கல் மேடு  பகுதி அமைந்துள்ளது. இங்கு மணி என்பவர் தனது விவசாய தோட்டத்தில் மரவள்ளி   கிழங்கு பயிரிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு  பழநாயக்கன்  பாளையத்தை சேர்ந்த சாந்தி (34),  பாப்பா(40) ஆகியோர் மணியின் தோட்டத்தில்  புல் அறுக்க சென்றுள்ளனர். அப்போது உறுமல் சத்ததுடன் கரடி ஒன்று  ஓடிவந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் கத்தி  கூச்சலிட்டனர்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  தடி,  கம்புகளுடன் ஓடிவந்தனர். அதைப்பார்த்த கரடி அருகில் இருந்த மரவள்ளி கிழங்கு  தோட்டத்துக்கு சென்றுவிட்டது. உள்ளே சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் கரடி  சிக்கவில்லை. இந்த சம்பவத்துக்கு பின் இங்குள்ள தோட்டத்துக்கு பெண்கள்  வேலைக்கு செல்லவே பயந்து அஞ்சுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  மணியின் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன்(45) என்பவர், மரவள்ளி  செடிகளுக்கு நடுவே,  சுமார் 4 அடி உயரம் கொண்ட கரடி இருப்பதை  பார்த்துள்ளார். தகவலறிந்த பொதுமக்கள் அங்கு கூடினர். இதுகுறித்து  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மண்டல வன அலுவலர் காஞ்சனா உத்தரவின்  பேரில் நாமக்கல் வனவர் தமிழ்வேந்தன் தலைமையில் வனகாப்பாளர்கள் துரைசாமி,  மோகன், குமார்,  வனக்காவலர்கள் மதிவாணன், பெரியசாமி ஆகியோர் கொண்ட குழுவினர்,  நேற்று பிலிக்கல்மேடு  பகுதிக்கு வந்து கரடியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது மரவள்ளி தோட்டத்திற்குள் அடையாளம் காண முடியாத காலடி தடங்கள் இருப்பதை கண்டனர். தொடர்ந்து பட்டாசு மற்றும் பாதுகாப்பு  ஆயுதங்களுடன் உள்ளே சென்று தேடினர்.  ஆனால் எந்த விலங்கும்  தென்படவில்லை. வனத்துறையினர்  இரவு முழுவதும் தோட்டத்திற்குள் தங்கி  இருந்து விலங்கின்  நடமாட்டத்தை  கண்காணித்தனர். நேற்று மாலை வரை எந்த  விலங்கும் சிக்கவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,  மரவள்ளி  தோட்டத்தில் கரடி சுற்றுவதாக தெரிவித்தனர். ஆனால் கரடி  கண்களில்  தட்டுப்படவில்லை. மண்ணில் காணப்படும் காலடித்தடங்கள் கரடியின் காலடித்தடம்  போல  இல்லை. அது  கழுதை புலியின்  காலடி போல் தெரிகிறது. அந்த விலங்கு  தற்போது தோட்டத்திற்குள் இல்லை.  தொடர்ந்து கண்காணித்து வருவதால், பொது  மக்கள் அச்சமின்றி வேலைக்கு செல்லலாம் என அவர்கள் தெரிவித்தனர். வனத்துறையினர்  தைரியம் தெரிவித்தாலும், மர்ம விலங்கு சிக்காததால், அப்பகுதியில் உள்ள  தோட்டங்களில் வேலை செய்யும் ஆண், பெண்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.


Tags : Tiruchengode ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து