×

போச்சம்பள்ளி அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி



போச்சம்பள்ளி, மே 30: போச்சம்பள்ளி அடுத்த சந்தூரில் திரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் மகாபாரத திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவும் கூச்சானூர் கொல்லாபுரி அம்மன் நாடகசபா வாத்தியார் ராஜா குழவினரின் தெருக்கூத்து நாடகம் நடந்து வருகிறது. அதில் கிருஷ்ணன் பிறப்பு, அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, சூரனுக்கு சோறு எடுத்தல், வில் வளைப்பு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், காண்டவன் தகனம், சராசந்திரன் சண்டை, அரவான் சாபம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகம் நாள்தோறும் நடந்து வருகிறது.

இதன் இறுதி நாளான நேற்று 18ம் போர், துரியோதனன் படுகளம் நாடக நிகழ்ச்சி நடந்தது. நாடக கலைஞர்கள் கிராமத்தை சுற்றி சண்டை போட்டு கொண்டு சென்றனர். பின்னர் துரியோதனன், பீமன் சண்டையில் துரியோதனன் இறப்பது போல் நாடக குழவினர் நடித்து காண்பித்தனர். மேலும், பாஞ்சாலி சபதம் முடிக்கும் வகையில் துரியோதனனை படுகளம் செய்து அவன் ரத்தத்தில் கூந்தலை முடிக்கும் காட்சி நடந்தது. தொடர்ந்து, திரவுபதியம்மன் வீதிஉலா எடுத்து சென்று கங்கையில் நீராடுதல் மற்றும் சிறப்பு பூஜைகல் நடத்தப்பட்டது. இதையடுத்து, நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  


Tags : Duryodhana Batukalam ,Pochampalli ,
× RELATED தடுப்பூசி போட்ட 2வது நாளில் ஒன்றரை மாத குழந்தை சாவு