×

அடிப்படை வசதிகளும் சுத்த மோசம் படந்தால் கிராமத்தில் கழிவறைக்கு பூட்டு

சாத்தூர், மே 30: சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள படந்தால் கிராமத்தில் கழிவறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திறந்தவெளிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாக படந்தால் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் படந்தால் கிராமம் உள்ளது. சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் தென்றல் நகர், வசந்தம் நகர், அய்யனார் காலனி, மருதுபாண்டியர் நகர், வைகோ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிறிய மற்றும் பெரிய தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், படந்தால் கிராமத்துக்கு தேவையான குடிநீர், வாறுகால், சாலை, பொதுக்கழிப்பறை, பஸ்நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை மாதக்கணக்கில் அள்ளாததால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

கிராமத்தில் உள்ள கழிவறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. பெரும்பாலான தெருக்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில்  பல்வேறு குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன என புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, படந்தால் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facilities ,village ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...