×

விருதுநகரில் கழிவுநீரின் புகலிடமாகும் கவுசிகா நதி

விருதுநகர், மே 30: விருதுநகரில் கழிவுநீர் புகலிடமாகும் கவுசிகா நதியால் 25 கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் உள்ள கவுசிகா நதியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ரூ.3 கோடியில் தூர்வாரி சீரமைத்தனர். தற்போது மீண்டும் புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. நகரில் கழிவுநீரின் புகலிடமாக கவுசிகா நதி மாறி வருகிறது. இதனால், 25 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு வடமலைக்குறிச்சியிலிருந்து குல்லூர் சந்தை அணை வரை கவுசிகா நதியின் கரைகளை பலப்படுத்தி, கழிவுகளை அகற்றி ஆழப்படுத்தினர். இந்நிலையில், கவுசிகா நதியில் மீண்டும் கருவேல மரங்கள் புதர்போல் வளர்ந்துள்ளன. இதில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. நதியின் கரைப்பகுதிகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

இதனால், மழை பெய்தாலும், ஆற்றில் நீர்வராமல் குல்லூர் சந்தைக்கு செல்லாமல் வீணாகிறது. கவுசிகா நதி மீது அமைக்கப்பட்டுள்ள மூன்று பாலங்களின் ஓரம் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த குப்பை நேரடியாக ஆற்றுக்குள் செல்கிறது. யானை குழாய் அருகே, தரைப்பாலத்தில் இரண்டு ஓரங்களிலும் கரும்புச்சக்கை, பிளாஸ்டிக் கழிவுகள், மாட்டுச்சாணம், மீன்கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டுகின்றனர்.

விருதுநகர் புதிய பஸ்நிலையம் அருகே, பாலம் அருகிலும் தொடர்ச்சியாக மீன் கழிவுகளையும், ஓட்டல் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து கவுசிகா நதியில் கழிவுநீர் புகாமல் தடுக்கவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kausika River ,Virudhunagar ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...