×

மணக்காடு ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம்

சேதுபாவாசத்திரம், மே 30: தஞ்சை கலெக்டர் அண்ணாதுரைக்கு சேதுபாவாசத்திரம் பாஜ ஒன்றிய பொது செயலாளர் ஆறுமுகம் புகார் மனு அனுப்பினார்.

அதில் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மணக்காட்டில் உள்ள மின்மாற்றியில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம் விவசாய மோட்டார்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் என இணைப்புகள் அதிகம் இருப்பதால் வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் தான் கிடைக்கிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார்கள் இயக்குவதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதனால் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் கிடைப்பது அரிதாக உள்ளது. மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள கூட்டு குடிநீர் தொட்டியில் இருந்தும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. பெயரளவில் தான் கிடைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல கோரிக்கை மனுக்கள் கொடுத்து கலெக்டர் ஆய்வு செய்து புதிய மின்மாற்றி அமைத்து தருவதாக உறுதியளித்தார்.ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை.  

கஜா புயலின் பார்வையிட வந்த மின்துறை அமைச்சர் வேலுமணியிடம் முறையிட்டு உடனடியாக மின்மாற்றி அமைத்து கொடுக்கும்படி வாய்மொழி உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கான பலன் இதுவரை கிடைக்கவில்லை. மின் பற்றாக்குறையால் இரவு நேரங்களில் மின்விளக்கு, மின்விசிறி இயங்குவது இல்லை. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.மேலும் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தை போக்க ஒரு வாரத்துக்குள் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Manakkadu ,
× RELATED சீர்காழி பிடாரி வடக்கு வீதியில்...