×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை, மே 30: தஞ்சையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயில்வதற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகள், கல்லூரி மாணவிகளுக்கு 4 விடுதிகள், பள்ளி மாணவர்களுக்கு 28 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 8 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேர்த்து கொள்ளப்படுவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கான விடுதிகளில் சேருவதற்கு அவர்களின் குடியிருப்பு விடுதியில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும். மாணவிகளுக்கு குடியிருப்பு தூர நிபந்தனை பொருந்தாது.

பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 2019-20ம் ஆண்டுக்கு சேர  விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை விடுதி காப்பாளர்களிடம் இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆதார் அட்டையின் நகல் மற்றும் மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன் இணைத்து ஜூன் 26ம் தேதிக்குள் பள்ளி விடுதிகளிலும், ஜூலை 4ம் தேதிக்குள் கல்லூரி விடுதிகளிலும் தொடர்புடைய விடுதி காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : Tribal Welfare Departments ,Adi Dravidar ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை