நாகை நகர எல்லையில் தூய்மை பணி தீவிரம்

நாகை, மே 30: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகை நகர எல்லையை தூய்மை செய்யும் பணியில் தூய்மை பரப்புரையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.நாகை நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாகை நகர எல்லையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை விதியின்படி வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என்று பிரித்து வாங்கும் முயற்சியில் தூய்மை பரப்புரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பரப்புரையாளர்கள் காலை 7 மணிக்கு எல்லாம் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.மேலும் குப்பைகள் சேகரிக்க செல்லும் முன் மினிலோடு ஆட்டோ மூலம் விளம்பரம் செய்து கொண்டு செல்கின்றனர். மேலும் நடத்துனர்கள் பயன்படுத்தும் விசில் அடித்தும் வீடுகளில் உள்ள குப்பைகளை கேட்டு வாங்கி சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை நாகையில் உள்ள உரக்குடோனுக்கு கொண்டு சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து மக்கும் குப்பையை உரமாக மாற்றுகின்றனர். மக்காத குப்பையை கொண்டு மின்சாரம் தயாரித்து வருகின்றனர்.

மேலும் நாகை நகர எல்லையில் தெருவில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை அகற்றி விட்டு அந்த இடத்தில் இனி குப்பை கொட்ட மாட்டோம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலங்களை போடுகின்றனர். குப்பை தொட்டி இருந்தால் தான் அதில் குப்பைகளை போடுவார்கள். இதனால் அந்த பகுதி துற்நாற்றம் வீசும். எனவே குப்பை தொட்டிகளை அகற்றி விட்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலம் போடுவதுடன் பலன்தரும் மரங்களையும் நடுவதையும் செய்கின்றனர். வீடுகள்தோறும் குப்பைகள் கேட்டு நாடி வரும் தூய்மை பரப்புரையாளர்களிடம் குப்பைகளை மட்டும் கொடுத்தால் போதும் நாகை நகராட்சி குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற முடியும் என்று தெரிவிக்கின்றனர்.வீடுகளில் தோட்டங்கள் வைத்திருந்தால் மக்கும் குப்பையை கொண்டு எவ்வாறு இயற்கை உரம் தயார் செய்வது என்பது குறித்த விழிப்புணர்வையும் குடும்ப பெண்களிடம் இலவமாக இந்த தூய்மை பரப்புரையாளர்கள் கற்று தருகின்றனர்.

× RELATED தென்மேற்கு பருவகாற்று தீவிரம் தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி உயர்வு