×

கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலம்

கரூர், மே 30: கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் ஆற்றில்விடும் விழா நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெற்றது. கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 17ம்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விடிய விடிய கரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூத்தட்டு ரதங்கள் கோயிலை நோக்கி வந்தன. வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு பூத்தட்டு ரதங்கள் கோயிலை அடைந்ததும் அங்கு வழிபாடு செய்தனர்.  19ம்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிக்குப் பின்னர் தினமும் காலை பல்லக்கு அலங்காரம், இரவு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பெண்கள், பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மார்க்கெட் வரை நீண்ட வரிசையில் நின்று வந்து வழிபாடு செய்தனர்.27ம்தேதி தேர்த்திருவிழா நடைபெற்றது. கோயில் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் வடம்பிடிக்க புறப்பட்டது. தேர்வீதியை சுற்றி மீண்டும்தேர் நிலைக்கு வந்தது. கோயில்பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 ஏராளமான  பக்தர்கள் மாவிளக்கு, பால் குடம்எடுத்து வந்து வழிபாடு செய்தனர். நேற்று அக்னி சட்டிஎடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திகடனை நிறைவேற்றினர். அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளித்துவிட்டு வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முக்கிய விழாவான கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் நேற்று (புதன்) நடைபெற்றது. மாலை 5.15மணிக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தயிர்சாதம் படையலிட்டு கம்பம் எடுக்கப்பட்டது.. கோயில் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கம்பம் வீதிஉலாவாக வந்தது. வழிநெடுக பக்தர்கள்பூக்களைகொடுத்து சாமி தரிசனம் செய்தனர். அமராவதி ஆற்றை அடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த அகழியில் கம்பம் விடப்பட்டது. இதனையடுத்து பிரமாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பசுபதிபாளையம் மற்றும் திருமாநிலையூரில் உள்ள பாலத்தில் நூற்றுக்கணக்கானோர் நின்று வாணவேடிக்கையை  கண்டுகளித்தனர்.லட்சணக்கணக்கான பக்தர்கள் கம்பம் விடும்விழாவில் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி கரூர் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பித்தக்கது.

Tags : festival ,river ,Kambam ,temple festival ,Karur Mariamman ,
× RELATED மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில்...