சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் தற்கொலைச் சம்பவங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்மை குறைகிறது பெண்களுக்கு கவுன்சலிங் வழங்க அட்வைஸ்

சிவகங்கை, மே 30: சிவகங்கை மாவட்டத்தில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியரிடமும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்மை குறைவதால், மாவட்டம் முழுவதும் அமைப்புகள் மூலம், அவரகளுக்கு கவுன்சலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனநல மருத்துவர் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2016ல் 280 பேரும், 2017ல் 320 பேரும், 2018ல் 317 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்தாண்டில், கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். தற்கொலை முயற்சி சம்பவங்கள் இரண்டு மடங்கு நடக்கின்றன. தூக்கிடுதல், எலி மருந்து, பூச்சி மருந்து மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் மருந்துகளை குடித்தல், தீக்குளிப்பது, கட்டிடங்களில் இருந்து குதிப்பது என நடக்கும் தற்கொலைச் சம்பவங்களில் மருந்து குடிப்பவர்களில் சிலர் மட்டுமே சரியான சமயத்தில் தரப்படும் மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றப்படுகின்றனர். தற்போது எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்துள்ளது. இவ்வாறு செய்பவர்கள் சிலநாட்கள் உடல் நிலை நன்கு இருப்பது போல், காணப்பட்டு பின்னர் இறந்து விடுகின்றனர். தற்கொலை செய்துகொள்பவர்களில் இளம்பெண்கள் அதிகமாக உள்ளனர்.

மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை குடும்ப பிரச்னைகள் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் கண்டிப்பது, விரக்தி, கடன் தொல்லை, உடல்நிலை பிரச்னை, காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்கின்றனர். குடும்பத்தினர் புறக்கணித்ததால் ஆதரவின்றி முதியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் உள்ளன.

பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகும் வழக்குகளில் 80 சதவீதம் வயிற்று வலி இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக நாள்தோறும் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் ஒருவர் கூறியதாவது, ‘முன்பெல்லாம் நோய் தாக்குதல் அதிகரித்து உடலில் வேதனை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்வது அல்லது மிகப்பெரிய சம்பவங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்தனர். ஆனால், தற்போது சாதாரண பிரச்னைகளுக்கு கூட அவசரப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இளவயதினர் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. மற்ற குற்ற வழக்குகளைப் போல் தற்கொலை வழக்குகளும் அதிகரித்து வருகிறது’ என்றார்.

மனநல மருத்துவர் ஒருவர் கூறியதாவது,’ பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிச்சல், சகிப்புத்தன்மை குறைந்தும் தற்கொலையை நாடுகின்றனர். இளம் வயதினர் எதைப்பற்றியும் சிந்திக்காமல் இந்த முடிவை எடுப்பது கவலையளிக்கக்கூடியது. பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தி தேவையற்ற சிந்தனையை போக்க வேண்டும். ஆபத்தான இப்பிரச்னைக்கு மாவட்டம் முழுவதும் மகளிர் மன்றங்கள் உள்ளிட்ட அமைப்புகள் உதவியுடன் கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : suicides ,district ,Sivagangai ,
× RELATED லாட்ஜில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை