×

திருப்புத்தூர் அருகே குழாயில் ஏற்பட்ட கசிவால் வீணாகும் காவிரி குடிநீர்

திருப்புத்தூர், மே 30: திருப்புத்தூர் அருகே மதகுபட்டி-கல்லல் செல்லும் வழியில் செம்பனூர் பகுதியில் காவிரி குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி வெளியே செல்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது திருச்சி-ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.615 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதில் திருப்புத்தூர் வழியாக வரும் காவிரி குடிநீர் தென்மாபட்டு, ஆத்தங்கரைப்பட்டி, பட்டமங்கலம், செம்பனூர், கல்லல் வழியாக ராமநாதபுரம் வரை செல்கிறது. இதில் ஆங்காங்கே தொட்டி (ஜம்பர்) அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் அடைப்பு, நீர் வெளியேறுதல், நீர் குறைவாக வருதல் உள்ளிட்டவைகள் கண்டறியப்படும்.

மதகுபட்டி-கல்லல் செல்லும் ரோட்டில் செம்பனூர் அருகே செல்லும் காவிரி குடிநீர் குழாயின் மேல் பொருத்தப்பட்டுள்ள ஜம்பரில் வெல்ட் வைக்கப்பட்ட இடத்தில் பழுதாகி ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அந்த ஓட்டையின் வழியாக கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் அருகில் உள்ள கண்மாயில் விழுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியினர் சிலர் அந்த ஓட்டையை கம்பு குச்சியால் அடைத்து, அதன் மேல் கற்களை வைத்துள்ளனர். இதனால் தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்துள்ளனர். இருந்தபோதிலும் தண்ணீர் லேசாக கசிவு ஏற்பட்டுகொண்டே இருக்கிறது. அடைக்கப்பட்ட குச்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் அதிகளவில் தண்ணீர் வீணாக வெறியேற வாய்ப்புள்ளது. இதேபோன்று திருப்புத்தூர்-பட்டமங்கலம் ரோட்டிலும் சில இடங்களில் தொட்டிகளில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் லேசாக வெறியேறுகிறது.

இதனால் அடுத்த ஊர்களுக்கு செல்லும் தண்ணீர் மிக குறைவாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மேலும் தற்போது பரவலாக அனைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளநிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாகவை தடுக்க வேண்டும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுது ஏற்பட்டுள்ள இடத்தைப பார்வையிட்டு பழுதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Cauvery ,Thiruppattur ,
× RELATED காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்...