×

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு சித்திரை வீதியில் பக்தர்கள் நடக்க முடியாமல் அவதி மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மதுரை, மே 30: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளில் வெயிலில் கால் ஊன்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கோயிலை சுற்றிலும் பக்தர்கள் வந்து செல்ல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இவர்கள் மதிய நேரம் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு தங்கியுள்ள அறைக்கும், காலணிகள் வைத்திருக்கும் அறைக்கும் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.

சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது அடிக்கும் வெயிலில் பக்தர்கள் கால்களை ஊன்ற முடியாத நிலையில் தள்ளாடி தவிக்கின்றனர். இதில் பலர் கைக்குழந்தைகளுடன் சூடு தாங்க முடியாமல் ஓட்டம் பிடித்து நிழலை பார்த்து நிற்பது பெரும் வேதனையாக உள்ளது. கோயிலின் உள்பிரகாரத்திலும், சித்திரை வீதிகளிலும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் பெயின்ட் மற்றும் மிதியடிகளை போட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவையைச் சேர்ந்த கணேசன் கூறும்போது, ‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். செல்போன்களை வரிசையில் நின்று கொடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மீண்டும் சுவாமி தரிசனம் செய்ய சென்று விட்டு வெளியே வரும் போது, வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கால்களை கீழே ஊன்றக்கூட முடியாத நிலையில் சூட்டில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னைப்போல் பலர் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு ஓடுகின்றனர்.

எனவே நிர்வாகம் ஏன் இந்த அடிப்படை பணிகளை கூட செய்யவில்லை என்பது தான் புரியவில்லை. மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு போட்ட பந்தல் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர பகுதியில் பிரிக்காமல் இருப்பதால் நிழல் உள்ளது. மற்ற பகுதியில் வெயிலில் நடக்கக்கூட முடியவில்லை. வெயிலின் தாக்கத்தை குறைக்க பெயின்ட் மற்றும் தரை மிதியடிகளை போட நிர்வாகம் முன் வரவேண்டும்’ என்றார்.

Tags : Madurai ,pilgrims ,road ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...