×

ஐகோர்ட் பத்திரகாளியம்மனுக்கு 200 கிடா வெட்டி நேர்த்திக்கடன் 300 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்

பழநி, மே 30: பழநி அருகே பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவில் 200 கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சாட்டு திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்விழா நேற்று நடந்தது. பழநி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். பத்திரகாளியம்மனுக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதனைத்தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலின் முன்புறம் ஏற்படுத்தப்பட்ட பிரம்மாண்ட பூக்குழியில் குலவை கோஷத்துடன் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். 200க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இளைஞர் அமைப்புகளின் சார்பில் அலங்கார ரத ஊர்வலம் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பழநி தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags : pilgrims ,sanctuary ,ekart Pattakaliyamman ,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...