×

பழங்குடியினர் விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

ஊட்டி, மே 30:  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் சேர்ந்து பயன்பெற மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களை விடுதியில் சேர்த்து அவர்களை முன்னேற செய்ய வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேற்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் 21 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் மற்றும் 3 பழங்குடியினர் நல விடுதிகள் இயங்கி வருகின்றன. கூடலூர் வட்டத்தில் கூடலூர், ஓவேலி பகுதிகளில் தலா 2 மாணவர், மாணவியர்கள் விடுதிகளும், பந்தலூர், குன்னூர் வட்டங்களில் தலா 1 மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் உள்ளன. கோத்தகிரி வட்டத்தில் கீழ்கோத்தகிரியில் 1 மாணவர் விடுதியும், கோத்தகிரியில் தலா 1 மாணவ, மாணவியர் விடுதியும் உள்ளது. குந்தா வட்டத்தில் சாம்ராஜ் பகுதியில் தலா 1 மாணவர், மாணவியர் விடுதியும், மஞ்சூரில் ஒரு மாணவர் விடுதியும் உள்ளது.
 
ஊட்டி வட்டத்தில் ஊட்டி, நடுவட்டம், காத்தாடிமட்டம் ஆகிய பகுதிகளில் 3 மாணவர் விடுதிகளும், ஊட்டியில் 1 கல்லூரி மாணவர் விடுதியும் 1 கல்லூரி மாணவியர் விடுதியும், 1 தொழில் கல்வி மாணவர் விடுதியும் உள்ளன. பழங்குடியினர் நலத்துறை மூலம் ஊட்டியில் 1 மாணவியர் விடுதி, நீர்காச்சிமந்து பகுதியில் 1 விடுதி, குன்னூர் ஆணைப்பள்ளம் பகுதியில் 1 விடுதியும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

விடுதி மாணவ, மாணவியர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடைகள், கம்பளி, போர்வை, வெம்மை ஆடைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் ஜூன் 27ம் தேதியும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 14ம் தேதியும் ஆகும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : Tribal Restaurant ,
× RELATED பழங்குடியினர் விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு