×

பெதப்பம்பட்டியில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்

உடுமலை, மே 30:பெதப்பம்பட்டியில் கடையை வாடகைக்கு எடுத்து முறைகேடாக டாஸ்மாக் மதுக்கூடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை போலீசார் கண்டும், காணாமல் உள்ளனர்.  குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராகும். இங்குள்ள நால்ரோடு வழியாக தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, செஞ்சேரிமலை  தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. நால் ரோடு பகுதியில் பேருந்து நிறுத்தம்,ஆரம்ப சுகாதார நிலையம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். நால் ரோடு சந்திப்பில் இருந்து சுமார் 1 கிமீ., தொலைவில் பொள்ளாச்சி சாலையிலும், செஞ்சேரிமலை  சாலையிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு பார்களும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆளும்கட்சி பிரமுகர்கள் நால்ரோடு சந்திப்பில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அனுமதியின்றி முறைகேடாக மது விற்பனை செய்து வருகின்றனர். அங்கேயே பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை இங்கு தடையின்றி விற்பனை நடக்கிறது.

பஜார் பகுதி என்பதால் இங்கு குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது. காலையில் வேலைக்கு செல்ல பேருந்து நிறுத்தம் வரும் பயணிகள் குடிபோதை ஆசாமிகளின் தொல்லையால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அச்சப்படுகின்றனர். அடுத்தவாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவ, மாணவிகளும் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்துதான் வெளியூரில் உள்ள பள்ளிகளுக்கு செல்வார்கள். ஆளும்கட்சி பிரமுகர்கள் நடத்துவதால், ரோந்து போலீசாரும் கண்டுகொள்ளவதில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக, நெடுஞ்சாலை அருகே, முறைகேடாக இந்த பார் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் நிர்வாகம் உடனடியாக இந்த மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Taskmith ,Bethampampatti ,
× RELATED பெதப்பம்பட்டி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு