ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக காங்கிரசில் புதிய அமைப்பு

புதுச்சேரி, மே 30: மத உணர்வுகளை தூண்டியே பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக காங்கிரசில் புதிய அமைப்பு துவங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி  பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கட்சி தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு  அழைப்பாளராக அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டார். முதல்வர்  நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன்,  கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்,  தியாக தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின், ஒப்பற்ற தலைவராக ராகுல்காந்தி செவ்வனே செயல்பட்டு வருகிறார். எழுச்சி மிகு தலைவரின் உயரிய தலைமையில்தான் காங்கிரஸ் இயக்கம் புதிய எழுச்சி பெறும் என்பதை புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி உறுதியோடு தெரிவிக்கிறது.

 எனவே ராகுல்காந்தி ராஜினாமா முடிவை திரும்பப்பெற வேண்டுமென காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது. ராகுல்காந்திக்கு, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி என்றென்றும் துணைநிற்கும்  என இதய பூர்வமாக உறுதி கூறுகிறது. தன்னலம் கருதாத ராகுல்காந்தி ராஜினாமா முடிவை திரும்பப்பெற வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ஏகமனதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. தீர்மானத்தை  வழிமொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  வடமாநிலங்களில் மதத்ைத வைத்தும், பாகிஸ்தானை காரணம் காட்டியும், புல்வாமா  தாக்குதலை முன்வைத்தும் மக்களின் உணர்வுகளை தூண்டி பிரசாரத்தில்  ஈடுபட்டனர்.
 பாஜக வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல. தற்போது காங்கிரஸ்  கட்சிக்கு சோதனையான காலகட்டம். அதே நேரத்தில் புதுச்சேரியில் காங்கிரஸ்  வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி  பெற்றுள்ளார். பாஜக ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வைத்து மத உணர்வுகளை தூண்டி  வாக்குகளை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆர்எஸ்எஸ் போன்ற ஒரு  அமைப்பை ஏற்படுத்தி மதவாதத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை  உருவாக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவானது 24 மணி  நேரமும் ஆர்எஸ்எஸ் இயக்கம் மூலம் இந்தியா முழுவதும் மதவாதத்தை பரப்பி  வருகிறது.

 இதை முறியடிக்க ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை  சென்று மக்களை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். ராகுல்காந்தி  சீறிய தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெற்று எழும்.  அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும், என்றார். மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரியில் 390 காவலர் பணியிடங்களுக்கான வயது உச்சவரம்பு 22 வயதிலிருந்து 24ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதியோடு வயது வரம்பு  உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனநாயகம் காக்க ராகுல் நீடிக்க வேண்டும் :  அகில  இந்திய செயலாளர் சஞ்சய்தத்  பேசுகையில், கடந்த சில நாட்களாக காங்கிரஸ்  கட்சிக்காரர்கள் கடும் மனஉளைச்சலில்  இருக்கிறார்கள். உணர்வு ரீதியாக  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு  காரணம் ராகுல்காந்தி தனது பதவியை  ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்துள்ளது தான். காங்கிரஸ் எப்போதும் ஒரு  குடும்பம் போலவே இருப்பதால்  ராகுல்காந்தியின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவின் இந்த வெற்றி என்பது தற்காலிகமானது.  ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி  ஆகியோர் இந்திய திருநாட்டின் ஒற்றுமைக்காக  தங்கள் உயிரை  துறந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒவ்வொரு  இளைஞரும்,  மகளிரும், தொண்டர்களும் ராகுல் பதவியில் நீடிக்க வேண்டும் என்றே   விரும்புகிறார்கள். ஏனெனில் இந்த நாட்டின் ஜனநாயகம், ஒருமைப்பாடு ஆகியவை   காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு ராகுல் தொடர்ந்து தலைவர்   பதவியில் நீடிக்க வேண்டும்.
 பாஜக வெற்றி என்பது வெறும் எண்கள்தான். எனவே   ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறும். ராகுல்காந்தி மீது   மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே எங்கள் நம்பிக்கையும்,   உணர்வுகளையும் ராகுல்காந்தி மதிப்பார். எனவே அவர் தலைவர் பதவியில் நீடிக்க   வேண்டும். எதிர்காலத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது   என்பதை புதுச்சேரி வெற்றி அடையாளப்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சிக்கு   வந்தபிறகு மக்களிடம் பிளவு ஏற்படுத்துகிற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை   சமூக வலைதளங்கள், வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகள் ஓரணியில் திரள ராகுல்காந்தி தலைமையில் பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிப்பெற செய்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட கவர்னர் கிரண்பேடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : organization ,Congress ,RS ,
× RELATED அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து...