போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கோவை, மே30: கோவை சொக்கம்புதூரில் வசிப்பவர் நரேஷ் சர்மா. இவருடைய சொந்த ஊர் ராஜஸ்தான். இவரது மகள் ஆர்த்தி(19). பிளஸ்2 படித்து முடித்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் மகன் மணிகண்ட பிரபுவும்(20), கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.

இதனையடுத்து நரேஷ் சர்மா செல்வபுரம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த செல்வபுரம் இன்ஸ்பெக்டர் கணேசன், கமிஷனர் அலுவலகம் வந்து காதல் ஜோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘மணிகண்ட பிரபுவுக்கு இன்னும் திருமண வயது எட்டவில்லை. எனவே திருமணம் செய்வது குற்றம். அதே சமயத்தில் பெண்ணை உடன் வைத்திருப்பதும் குற்றம். எனவே அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் உள்ளது’’. என்றனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தாரையும் செல்வபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags : police commissioner ,
× RELATED ஆப்கன் ராணுவத்திடம் சரணடைந்த ஐஎஸ்...