×

அம்பை பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

அம்பை, மே 30:  அம்பை பகுதியில் செங்கோட்டைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாயில் முறையான பராமரிப்பு இல்லாததால் ஏற்பட்ட உடைப்பு, தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதை அப்பகுதி மக்கள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர். அம்பை அடுத்த ஊர்க்காடு சுடலைமாடசுவாமி கோயில் அருகே தாமிரபரணி நதிக்கரையில் செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து சேகரிக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் வாயிலாக அம்பை, கீழ ஆம்பூர் ஆழ்வார்குறிச்சி வழியாக பொட்டல்புதூர் முதல் செங்கோட்டை வரையிலான 61 கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 இதனிடையே எப்போதும் போக்குவரத்துக்கு பஞ்சமில்லாத அம்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே 4 ரோடுகள் சந்திக்கும் பகுதியில் சாலையருகே செல்லும் ராட்சத குழாயில் கடந்த வாரம் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
இது உடனடியாகச் சீரமைக்கப்படாததால் அதில் இருந்து வெளியேறும் குடிநீர் பல நாட்களாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் உருவான சேறு மற்றும் பள்ளத்தால் அதன் அருகேயுள்ள வங்கிகள், மசூதி போன்ற வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இவ்வழியே வந்துசெல்லும் பாதசாரிகளும், வாகனஓட்டிகளும் விபத்துக்கு உள்ளாகும் அவலம் தொடர்ந்தது.

குறிப்பாக, சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கிநிற்கும் தண்ணீரில் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கொடுத்தும் அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளதாகவும்,  இதேபோன்று பல முறை குழாய் உடைப்பு ஏற்பட்டபோதெல்லாம் பல்வேறு நாட்களுக்குப் பிறகே அதுவும் பெயரளவுக்கு மட்டுமே சரிசெய்வதாகவும் புகார் எழுந்தது. இதனால் பாதிப்புக்கு உள்ளான அப்பகுதி வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் செங்கோட்டைக்கு செல்லும் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறி பெருக்கெடுத்து ஓடும் குடிநீர், ஆங்காங்கே கழிவுநீரோடு கலந்து தேங்கிநிற்பதால் பிரதான சாலை சேதம் அடைந்துவருவதுடன் சுகாதார கேடு நிலவுவதாகவும், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் அபாயம் நிலவுவதாகவும் குற்றம்சாட்டியதோடு இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த 27ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட செங்கோட்டை நகராட்சி அதிகாரிகள், உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க உத்தரவிட்டனர். அதன்பேரில் செங்கோட்டைக்கு குடிநீர் கொண்டுசெல்லும் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் துவங்கியது. இதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளதோடு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : area ,Arrow ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி