×

குற்றாலத்தில் சிற்றாறு தூய்மைப்பணி

தென்காசி, மே 30:  தாமிரபரணியில் சங்கமிக்கும் சிற்றாறு நதியை  தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் குற்றாலத்தில் நேற்று துவக்கி வைத்தார். குற்றாலம் மெயினருவியை பிறப்பிடமாகக் கொண்டது சிற்றாறு. இந்த சிற்றாறுடன்  ஐந்தருவியில் பெருக்கெடுக்கும் தண்ணீர்,  பழைய குற்றால அருவியில் பெருக்கெடுக்கும் தண்ணீர் மற்றும் கிளை நதிகளான அரிகரா நதி,  அனுமன் நதி, கருப்பாநதி ஆகியவற்றுடன் இணைந்து சுமார் 80 கி.மீ. தொலைவுக்கு  பயணித்து நெல்லை அடுத்த சீவலப்பேரியில் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி ஆற்றில் சென்று கலக்கிறது.
 
நெல்லை மாவட்டத்தின்  தாமிரபரணிக்கு அடுத்தபடியாக 2வது பெரிய நதியான சிற்றாறு தாமிரபரணியைவிட அதிகமான மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. தென்மேற்கு மற்றும்  வடகிழக்கு பருவமழைகளால் பயன்பெறும் இந்த சிற்றாற்றின் குறுக்கே 17 அணைகளும், 19 கால்வாய்களும்  உள்ளன. 148 குளங்களில்  சேமித்து வைக்கப்படும் சிற்றாற்று தண்ணீரை நம்பி 9,846 எக்டேர் நிலப்பரப்பு பயன்பெறுகிறது. நேரடி பாசனமாக  1942 கிலோ மீட்டரும், குளங்கள் மூலமாக 7,903 எக்டேர் நிலப்பரப்பும் பயன்பெறுகிறது.  சிற்றாற்றின் மூலம் ஆண்டுக்கு 157 மில்லியன் க.மீ. தண்ணீர் கிடைக்கப்பெறுவது தனிச்சிறப்பாகும். இதில் தலை  அணைக்கட்டு, அடிவட்டாம்பாறை, வாழ்விலான்குடி,  புலியூர், பாவூர், திருச்சிற்றம்பலம்,  மாறாந்தை, வீராணம், மானூர், நெட்டூர், பள்ளிக்கோட்டை, உக்கிரன்கோட்டை,  அழகியபாண்டியபுரம், பிள்ளையார்குளம், செழியநல்லூர், பிராஞ்சேரி, கங்கைகொண்டான் ஆகிய 17  அணைக்கட்டுகள் உள்ளன.

இந்த அணைக்கட்டுகளில் 6 வரையுள்ள பகுதி முதல்  மண்டலமாகவும், 11வது அணைக்கட்டு வரையுள்ள பகுதி 2வது மண்டலமாகவும்,  17வது அணைக்கட்டு வரையுள்ள பகுதி 3வது மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு  நிர்வகிக்கப்படுகிறது. தென்காசி, வீ.கே.புதூர், ஆலங்குளம், மானூர்,  கோவில்பட்டி, நெல்லை ஆகிய 6 தாலுகா பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் சிற்றாற்றின் மூலம் பாசனம் பெறுகின்றன. மேலும் சிற்றாறு பல்வேறு  வகையான நிலப்பரப்புகள், மண் வகைகள் நிறைந்த பகுதிகள் வழியாக செல்வதால்  விவசாயம் செழித்து விளங்குகிறது. குறிப்பாக தென்காசி பகுதியில்  நெற்பயிரும், சுரண்டை, கீழப்பாவூர், வீ.கே.புதூர் பகுதிகளில் பணப்பயிர்கள்,  தோட்டப்பயிர்கள், காய்கறிகள், பூ வகைகள், கிழங்கு வகைகள் என பலவகையான  விளைபொருட்கள் இங்கு  விளைவிக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள  மிகப்பெரும் காய்கறி சந்தைகளாக பாவூர்சத்திரம், சுரண்டை, சாம்பவர்வடகரை,  ஆலங்குளம் சந்தைகளின் வர்த்தகத்திற்கு சிற்றாற்று நீரே அடிப்படை ஆதாரமாக  உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க சிற்றாறு பல இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும்,  கால்வாய்கள் தூர்ந்தும், கழிவுகள் நிறைந்தும், செப்டிக் டேக் கழிவுகள்  கலக்கும் இடமாகவும், குப்பை கொட்டும் பகுதியாகவும் மாறிவருகிறது.  சிற்றாறின் மீது அக்கறை கொண்ட பல்வேறு தொண்டு அமைப்பினரும் சுமார் 20  ஆண்டுகளுக்கும் மேலாக சிற்றாற்றை தூய்மைப்படுத்த வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த தினகரனிலும் தொடர்ந்து செய்திகள் படத்துடன் வெளியாகின. அதன் பலனாக தற்போது சிற்றாற்றை தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், குற்றாலத்தில் நேற்று துவக்கி வைத்துள்ளார். நெல்லை மாவட்ட நிர்வாகம், அண்ணா பல்கலைக்கழகம், நம்ம தாமிரபரணி தொண்டு நிறுவனம்  ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. குற்றாலத்தைப்  பொருத்தவரை கலெக்டராக ஷில்பா பொறுப்பேற்றபிறகு மேற்கொண்ட பழையகுற்றாலம்  கார் பார்க்கிங் அமைத்தல், சிற்றாறு தூய்மைப்பணிகள் உள்ளிட்டவை பெரும் வரவேற்பை  பெற்றுள்ளன.

Tags : Cleaner ,
× RELATED திண்டுக்கல், கொடைக்கானல் சிறைகளில்...