×

திருவண்ணாமலை பேன்சி ஸ்டோரில் கருக்கலைப்பு மையம் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கருவில் அழிப்பு

* போலி டாக்டர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் * ஸ்கேன் சென்டர்கள் தொடர்பு குறித்து விசாரணை


திருவண்ணாமலை, மே 30: திருவண்ணாமலையில் சட்ட விரோத கருக்கலைப்பில் தொடர்ந்து ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்படுவதாக கிடைத்த புகாரின்பேரில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்ரவர்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அன்பரசி மற்றும் குழுவினர் அந்த அறையில் சோதனை நடத்தி, கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, சட்டவிரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த கவிதா(41), அவரது கணவர் பிரபு(45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, ஐபிசி 419, 420, 315 மற்றும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் ஆக்ட் 1956 15(3) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், போலி பெண் டாக்டர் கவிதா 10ம் வகுப்பும், அவரது கணவர் பிரபு பிளஸ் 2ம் படித்திருப்பதும், தன்னுடைய மெடிக்கல் ஷாப்பில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த குற்றத்துக்காக ஏற்கனவே இரண்டு முறை பிரபு கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலி டாக்டர்களான கவிதா, பிரபு ஆகியோர் நடத்திய சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் நுழைவு பகுதியில், பொருத்தியிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில், நாெளான்றுக்கு சராசரியாக 2 அல்லது மூன்று பெண்கள் வந்து செல்வதும், ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, அழைத்து வரும் நபர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு, சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில், ஸ்கேன் ரிப்போர்ட்களும் சிக்கியிருக்கிறது. எனவே, ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கருவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெண் குழந்தைகள் வேண்டாம் என நினைக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பு கருவுறும் இளம்பெண்கள், மாணவிகள் போன்றோர் இந்த கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். மேலும், கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத்தரகர்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில் கைப்பற்றிய செல்போன் எண்களின் விபரங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிடக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், பல மாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்கள் இங்கு பெண்களை அழைத்து வந்திருப்பதும், ஒவ்வொரு பெண்ணிடமும் அதிகபட்சம் ₹5 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, தொடர் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags : abortion center ,Thiruvannamalai Penny Store ,infants ,
× RELATED இங்கிலாந்தில் 7 பச்சிளங்குழந்தைகளை...